பக்கங்கள்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (640) நாகம் சிறந்த மலர்க்காவில் !

தலைவிரி கோலமாக அந்தப் பெண்  ஓடி வருகிறாள்.   சேலை  கலைந்திருக்கிறது  !

(நாகம் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு, நல்ல பாடலை நமக்களித்த புலவரின் பெயர் தெரியவில்லை.  அவரது பாடலையாவது  சுவைத்து மகிழ்வோம் !)

-----------------------------------------------------------------------------------------------------------

தலைவிரி  கோலமாக மகள் ஓடி வருகிறாள்.  அவள் சேலை கலைந்திருக்கிறது. மூச்சு வாங்குகிறது. முகமெல்லாம் வேர்வைத் துளிகள். “ஏனடி ? என்ன நடந்தது ? ஏன் இப்படி ஓடி வருகிறாய் ?” “அம்மா ! சொல்கிறேன் ! கேள் !”

-----------------------------------------------------------------------------------------------------------

நாகஞ்   சிறந்த   மலர்க்காவிற்   போய்வரும்   நன்னுதலே !

நாகஞ்   சரித்திட்ட   வாறுசொல்   லீர்நம   னார்தமைப்போல்,

நாகந்   துரத்திய   தாலே   யென்மேனி   நடுநடுங்கி  

நாகஞ்   சரிந்த   தடீயெனை   யீன்றருள்   நாயகமே !

------------------------------------------------------------------------------------------------------------

ஒன்றும் புரியவில்லையா ? சரி ! சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !  அப்புறமாவது விளங்குகிறதா, பார்க்கலாம் !

-------------------------------------------------------------------------------------------------------------

நாகம்   சிறந்த   மலர்க்   காவில்   போய்வரும்   நல் நுதலே !

நாகம்   சரிந்திட்ட  ஆறு  சொல்லீர் !  நமனார்   தமைப்போல்,

நாகம்   துரத்தியதாலே   என்   மேனி   நடுநடுங்கி

நாகம்   சரிந்தது !   அடீ !  எனை  ஈன்ற   அருள்   நாயகமே !

-----------------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருளுரை:

---------------------------------

நாகம் சிறந்த மலர்க்காவில் = சுரபுன்னை  மரங்கள் நிறைந்த  பூஞ்சோலைக்கு ; (மலர் கொய்துவர) போய்வரும் = சென்று வரும் ; நல் நுதலே = அழகிய என் பெண்ணே ! ; நாகம் சரிந்திட்ட ஆறு = நீ உடுத்தியிருக்கும் சேலை  சரிந்து தளரும் விதத்தில் (அப்படி என்ன நடந்தது) சொல்லீர் = சொல்லடி பெண்ணேநாகம் நமனார் தமைப் போல்  துரத்தியதாலே = யானை ஒன்று,என்னை எமன் துரத்துவது போல் துரத்தியதாலே ; என் மேனி நடு நடுங்கி = என் உடலெல்லாம் நடு நடுங்கப் (பதறிப் போய் ஓடி வந்தேன்) ; நாகம் சரிந்தது அடீ = அடி என் தாயே,  (அதனால்) என் சேலை சரிந்து தளர்ந்திருக்கிறது : எனை ஈன்ற = என்னைப் பெற்ற ; அருள் நாயகமே ! = அருள் மிகுந்த என் தாயே !

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

பூஞ்சோலைக்கு மலர் கொய்து வரச் சென்ற என் பெண்ணே ! ஏனடி இப்படி   ஓடி   வருகிறாய் ?  உன் சேலை தளர்ந்து சரிந்திருக்கிறது; மேனி நடுங்குகிறது ; அப்படி என்ன நடந்தது அங்கே ?

என்னைப் பெற்றவளே ! அருள்மிகுந்த தாயே ! யானை ஒன்று எமன் போல என்னைத் துரத்தி வந்தது ; அதனால் அச்சமுற்று,  மேனி நடுநடுங்க உயிர் பிழைக்க ஓடி வந்தேன். அதனால்தான் என் சேலை  தளர்ந்து சரிந்திருக்கிறது ! வேறொன்றுமில்லை என் தாயே ! 

------------------------------------------------------------------------------------------------------------

நாகம் = சுரபுன்னை மரம், சேலை, யானை

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[தி.பி: 2051, துலை (ஐப்பசி),14]

{30-10-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

                     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

தனிப்பாடல் (637) ஒரு நாகம் விட்டு உயர் நாகத்தின் மீதினில் !

உச்சியில் ஏறி உறைகின்றதே !

நாகம் என்னும் சொல்லை வைத்துக் கொண்டு புலவர்கள் தான் எத்துணைச் சிலம்பம்  ஆடியிருக்கிறார்கள்பாடல்களில் ! அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறந்திருக்கிறதுபாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

ஒருநாகம்   விட்டுயர்   நாகத்தின்   மீதினில்   ஒண்டொடியாள்

ஒருநாகம்   வைத்தே   யொருசுனையாட    ஒருபுதுமை

ஒருநாகங்   காட்ட    வொருநாகம் பார்த்துடன்   ஓடையிலே 

ஒருநாக   நாகத்தின்   உச்சியிலேறி   உறைகின்றதே !

------------------------------------------------------------------------------------------------------------

படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் ! படியுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

ஒருநாகம்   விட்டு, உயர்   நாகத்தின்   மீதினில்   ஒண்டொடியாள்

ஒருநாகம்   வைத்தே  ஒரு சுனை ஆட  ஒரு புதுமை

ஒருநாகம்   காட்ட  ஒருநாகம்   பார்த்து, உடன்   ஓடையிலே

ஒருநாக   நாகத்தின்   உச்சியில் ஏறி   உறைகின்றதே !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

-------------------------------

ஒரு நாகம்  விட்டு = தனது நாணத்தை விட்டுஉயர் நாகத்தின் மீதினில்உயர்ந்த புன்னை மரத்தின் மீது ஏறி ; ஒண்டொடியாள் = ஒளிமிகுந்த வளையல்களை அணிந்த பெண் ; ஒரு நாகம்  வைத்தே = தன்  சேலையை (புன்னை மரக் கிளையில் ) வைத்துவிட்டு ; ஒரு சுனை ஆட = அங்கிருந்த ஒரு நீர்ச் சுனையில் இறங்கி நீராடினாள்

ஒரு புதுமை  ஒரு நாகம் காட்ட = அப்பொழுது ஒரு நல்லபாம்பு  புன்னை மரத்தடியில் படமெடுத்து ஆட ;

ஒரு நாகம் பார்த்து  உடன் ஓடையிலே = பாம்பு ஆடுவதைக் கண்டு பயந்த  குரங்கு  ஒன்று  மரத்திலிருந்த சேலையை எடுத்துக் கொண்டு கீழே குதித்து ஓடியது ;

ஒரு நாகம் = அப்படி ஓடிய குரங்கு ;  நாகத்தின் உச்சியில்  = அருகிலிருந்த (மலைக்) குன்றின் உச்சிக்கு ; ஏறி உறைகின்றதே = ஏறி அங்கே  அமர்ந்து கொண்டது.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------

அழகிய வளையல்கள் அணிந்த பெண்ணொருத்தி  நீராடுவதற்காகச் சுனைக்குச் செல்கிறாள்.  அங்கிருந்த புன்னை மரத்தில் அவள் ஏறி தன் சேலையை வைத்துவிட்டு இறங்கி வந்து சுனையில் நீராடுகிறாள். எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று, புன்னை மரத்தின் அடியில் படமெடுத்து ஆட,  மரத்தின் மீதிருந்து அதைக் கண்ட குரங்கு ஒன்று அச்சமுற்று, அவளது சேலையை எடுத்துக் கொண்டு, கீழே குதித்து ஓடி அங்கிருந்த குன்றின் உச்சிக்குச் சென்று பாதுகாப்பாக  அமர்ந்து கொண்டது !

நிறைந்த கற்பனை வளத்துடன் ’நாகம்’ என்னும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு அழகிய பாடலை நமக்கு அளித்துள்ள புலவரின் பெயர்  நமக்குத் தெரியவில்லை. வரலாற்றில் அவர் பெயர் பதிவாகவில்லை. அவர் பெயர் பதிவாகாவிட்டாலும் அவர் பாடல் நம் நெஞ்சில் பதிவாகி, நினைக்குந்தோறும் இன்பம் தருகிறது !

-------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),05]

{21-10-2020}

------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

தனிப்பாடல் (635) குதிரைக் கனியை நாகம் !

குதிரைக் கனியை நாகம் பறித்துக் கொண்டு ஓடுகிறது !  இது என்ன புதிர் ?

ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும் உண்டு;  பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லும் உண்டு ! பெயர் தெரியாத ஒரு புலவர் இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார் ஒரு பாடல் மூலம் ! இதோ அந்தப் பாடல் :-

-------------------------------------------------------------------------------------------------------------

            குதிரைக்  கனியை  நாகம்  பறித்துக்கொண் டோடையிலே

            குதிரை வரக்கண்டு நாகத்தில்  ஏறிடக்   கூடவந்த

            குதிரை  யமட்டிட நாகம்  பயந்துபின் கூப்பிட்டதால்

            குதிரை பறந்து தடாகத்தில் ஆனையைக்  குத்தியதே !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

குதிரை = மாமரம், கொக்கு

நாகம் = குரங்கு, புன்னைமரம், செந்நாய்

ஆனை = களிறு

-------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது பாடலின் கருத்தைப் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு குரங்கு மாம்பழம் ஒன்றைப் பறித்துக் கொண்டு ஓடுகையில், அதைப் பார்த்துவிட்டுச் செந்நாய் ஒன்று அதைப் பறிக்க வர, குரங்கு பயந்து போய் அருகில் இருந்த புன்னை மரத்தில் ஏறிக் கொண்டது. ஏமாற்றமடைந்த செந்நாய், குரங்கைப் பார்த்து அச்சமூட்டும் வகையில் குரலெழுப்பியது.  செந்நாயின் குரலால் மீண்டும் பயந்து போன குரங்கு , மரக்கிளைகளில் அங்குமிங்கும் தாவித் தாவிக்  கூக்குரல் இட்டது.  குரங்கின் செயலால் வெருண்ட  கொக்கு ஒன்று புன்னை மரத்திலிருந்து விரைவாகப் பறந்து சென்றது. அவ்வாறு செல்கையில் அருகில் இருந்த குளத்தில் களிறு (களிற்று மீன்) ஒன்று நீந்துவதைப் பார்த்து, (மனதில் ஆசை கொண்டு ) ஈட்டி  போல் பாய்ந்து சென்று அம்மீனைக் கொத்திக் கொண்டு பறந்தது !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்  விரிவாக :-

-------------------------------------------

குதிரைக் கனியை = மாங்கனியை; நாகம் பறித்துக் கொண்டு ஓடையிலே =  குரங்கு ஒன்று மாமரத்தில் ஏறிப் பறித்துக் கொண்டு ஓடுகையில்;  குதிரை வரக் கண்டு = செந்நாய் ஒன்று அதைப் பிடுங்க வருவதைக் கண்டு ; நாகத்தில் ஏறிட = (குரங்கு) பயந்து போய் அருகில் இருந்த புன்னை மரத்தில் ஏறிக்கொள்ள;  கூடவந்த குதிரை அமட்டிட = ஏமாற்றமடைந்த செந்நாய்  குரங்கைப் பார்த்து அச்சமூட்டும் வகையில் குரல் எழுப்ப; நாகம் பயந்து பின் கூப்பிட்டதால் = குரங்கு பயந்து போய் கூக்குரலிட; குதிரை பறந்து = புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு, குரங்கின் கூக்குரலால் வெருண்டு பறந்திட; தடாகத்தில் = வழியில் இருந்த தடாகத்தில் ; ஆனையைக் குத்தியதே = களிற்று மீன் ஒன்று  நீரின் மேல் மட்டத்தில் நீந்துவதைப் பார்த்து, விரைந்து சென்று அதைக் கொத்திக் கொண்டு பறந்தது !

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களின் சொல் விளையாட்டைப் பார்த்தீர்களா ?

எப்படிப்பட்ட புலவர்கள் எல்லாம் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ! இக்காலத்தில் எங்கெங்கும்  வறட்சி தான் -  தமிழ்ப் புலவர்களின் நா உள்பட !  இக்காலப் புலவர்களிடம், தமிழும் இல்லை; தமிழ் உணர்வும் இல்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, நளி (கார்த்திகை),01]

{16-11-2020}