பக்கங்கள்

செவ்வாய், அக்டோபர் 20, 2020

தனிப்பாடல் (130) வடிவினிற் சிறந்தோய் நின் மருங்குற்ற - புதிர்ப் பாடல் !

யார் இந்தப் பிள்ளை ?

கடந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, தமிழைக் கற்றறிந்து துறைபோகிய அறிஞர்கள் பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் பெயர் குமாரசாமி முதலியார். இவரைப் பற்றிய வேறெந்தச் செய்தியும் வரலாற்றில் பதிவாக வில்லை. இவர் இயற்றிய  ஒரு பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

                               வடிவினிற்   சிறந்தோய் !   நின்மருங்   குற்ற

                                .....மைந்தனார்    என்றவன்   றனக்கு

                                மடவர    லிவன்றன்    தந்தையார்    யார்க்கு

                                ....மாமனோ    அவன்றந்தை    யெனக்கு

                                 நடைபெறு    மாம    னாகுமென்    றனளந்

                                  .....நங்கைக்கும்   அம்மக    னுக்கும்

                                  புடவியில்    வழங்கும்    முறையறிந்    தெனக்குப்

                                   .....புகன்றிட    வேண்டுகின்    றனனே !

 

-----------------------------------------------------------------------------------------------------------

படிப்பதற்கும், படித்துப் புரிந்துகொள்வதற்கும் சற்றுக் கடினமான இப்பாடலை, சந்தி பிரித்து எழுதித் தருகிறேன்எளிமையாகப் படிக்க வாய்ப்பாக !

-----------------------------------------------------------------------------------------------------------

                                  வடிவினில்     சிறந்தோய்நின்  மருங்கு  உற்ற

                                   .....மைந்தன்  யார்என்ற   அவன்  தனக்கு

                                   மடவரல், ”இவன்  தன்  தந்தையார்  யார்க்கு

                                   .....மாமனோ;   அவன்  தந்தை  எனக்கு

                                    நடைபெறு   மாமனாகும்  என்றனள்அந்

                                     .....நங்கைக்கும்  அம்மகனுக்கும்

                                    புடவியில்  வழங்கும்  முறை  அறிந்து  எனக்குப்

                                     .....புகன்றிட  வேண்டுகின்றனனே !

 

----------------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருளுரை:-

----------------------------------


வடிவினிற் சிறந்தோய் = ! அழகிய பெண்ணே! ; நின் மருங்குற்ற = உன் பக்கத்தில் நிற்கிறமைந்தனார் ? =  (மைந்தன் யார் ?) இந்தப் பையன் யார் ? ; என்றவன் றனக்கு = என்று வினவிய எனக்கு ; மடவரல் = அந்தப் பெண்இவன்றன் தந்தையார் = இவனுடைய  தந்தை ; யார்க்கு = யாருக்கு ; மாமனோ = மாமன் முறை  வேண்டுமோஅவன்றந்தை = அவனுடைய தந்தைஎனக்கு நடைபெறு மாமனாகும் = எனக்கு இப்பொழுது  மாமன் முறை ஆகும்; என்றனள் = என்று கூறினாள்; அந் நங்கைக்கும் அம்மகனுக்கும் = அந்தப் பெண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் ; புடவியில் = இவ்வுலகத்தில் ; வழங்கும் முறை = வழங்கப்பெறும் உறவு முறை; அறிந்து = அலசி ஆராய்ந்து ; எனக்குப் புகன்றிட = எனக்குச் சொல்லுமாறு; வேண்டுகின்றனனே = வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------

! பெண்ணே ! உன் அருகில் நிற்கும் இந்தப் பையன் யார்என நான் கேட்டேன்.

 

அதற்கு அந்தப் பெண்,“இந்தப் பையனின் தந்தை யாருக்கு மாமன் முறை உள்ளவரோ, அவருடைய தந்தை  எனக்கு மாமன் ஆகும்.” என்றாள்.

 

அப்படியானால், அந்தப் பெண்ணுக்கு, அவர் அருகில் நிற்கும் பையன் என்ன உறவு முறை வேண்டும் என்பதே இப்பாடல் மூலம் விடுக்கப்படும் புதிர் ?

 

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ! உங்கள் விடையைக் கருத்துரைப் பகுதியில்  பதிவு செய்யுங்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

ITI முகநூற் குழு.

[தி.பி: 2051, துலை (ஐப்பசி),02]

{18-10-2020}

----------------------------------------------------------------------------------------------------------

                  தமிழ்ப் பணி மன்றம்  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

  

திங்கள், அக்டோபர் 05, 2020

புதிய தமிழ்ச் சொல் (59) ஏணாள் ( WEEK )

புதுச்சொல் புனைவோம் !

ஏணாள் - WEEK

--------------------------------------------------------------------------

நொடி, நிமிடம், மணி, காலை, நண்பகல், மாலை இரவு, நாள், வாரம், ஆண்டு, பத்தாண்டு, நூறாண்டு போன்ற சொற்கள் காலத்தைக் குறிப்பவை.  இவற்றுள் வாரம் என்பதைத் தவிர பிற அனைத்தும் தமிழ்ச்சொற்களே !

 

வாரம் என்பது சமற்கிருதச் சொல்லானவார்என்பதிலிருந்து திரிக்கப்பட்ட சொல்.  சமற்கிருதத்தில்  ஞாயிற்றுக் கிழமை  என்பதைச் சூர்ய வார் என்றும் திங்கட் கிழமையைச் சோம வார் என்றும் கூறுவார்கள் !

 

இவ்வாறே பிற கிழமைகளை மங்கள் வார், புத் வார், குரு வார், சுக்ர வார், சனி  வார் என்று  அழைப்பார்கள்.  இடைக்காலத் தமிழர்கள்வார்என்னும் சொல்லைவாரம்என்று திரித்துத் தமிழில் புழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டனர் !

 

கிழமை என்னும் சொல்லே சமற்கிருத்ததில்வார்என்று வழங்கப்படுகிறது.  கிழமை என்பது நாளையும், ‘வார்எனப்படும் வாரம் ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதியையும் குறிக்கும்  சொல்லாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது !

 

சரி ! கிழமை என்பது நாளைக் குறிக்கும் சொல்லாகிவிட்ட பிறகுவாரம்என்பதைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது ? மடிமைக்கு இடம் கொடுத்துவிட்ட தமிழர்கள்வாரம்என்பதற்குப் புதுச் சொல் கண்டுபிடித்துப் புழக்கத்திற்குக் கொண்டுவராமல்வாரம்என்றே  சொல்லத் தலைப்பட்டுவிட்டனர் !

 

வார இதழ்கள், வாராந்திர அறிக்கைவாராந்திர வரவு-செலவுவாராந்திர முன்னேற்றம், வாராந்திர விற்றுமுதல் என்று WEEK என்பதைக் குறிக்கும் WEAKLY என்னும் ஆங்கிலச் சொல் தமிழர்கள் எழுத்திலும் பேச்சிலும்வாராந்திரம்என்று  நிலைபெற்றுவிட்டது !

 

சரி ! ”வாரம்”, “வாராந்திரம்”  என்னும் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமாஏற்றுக் கொண்டால்  நாம் தமிழுக்குச் செய்யும் பெருந் தீங்காக அது அமைந்துவிடும் ! அப்புறம் வேறு என்ன செய்வது ? புதிய சொல்லை உருவாக்குவோமே !

 

வாரம் என்பது ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதி என்பது உங்களுக்குத் தெரியும். இதைக் கருவாக வைத்தே நாம் புதுச் சொல் படைக்கலாம் ! வாரம் என்பது ஏழு நாள்கள்; ஏழு நாள்கள் என்பதை ஏழ்நாள் என்று சொல்லலாம்.  வாழ் + நாள் = வாணாள்  என்பது போல, ஏழு + நாள் = ஏழ்நாள் > ஏணாள்  என்று சொல்லலாம் !

 

ஏணாள் என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா !

 

-----------------------------------------------------------------------------------------------------------

                          WEEK..........................................= ஏணாள்

                          WEEKLY JOURNAL................= ஏணாளிதழ்

                          WEEKLY REPORT....................= ஏணாள்  அறிக்கை

                          WEEK-END HOLIDAYS.........= ஏணாள் ஈற்று  விடுமுறை

                          WEEK-WAR PROGRAME.....= ஏணாள் செயல்திட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),18]

{04-10-2020

-----------------------------------------------------------------------------------------------------------

          தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 

கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



ஏணாள்

சனி, அக்டோபர் 03, 2020

சிந்தனை செய் மனமே (81) - மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


மருந்தாக்க நிறுவனங்களும் நோயாளிகள் பெருக்கமும் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று, வீடு தோறும் நீரிழிவு நோயாளி ஒருவராவது இருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மூட்டுவலியைப் பற்றி யாருக்கும் தெரியாது.  இன்றைய நிலைமை என்ன? ஐம்பது விழுக்காடு மக்கள் மூட்டு வலியால்  அவதிப்பட்டு  வருகிறார்கள். இத்தகைய நிலைமை ஏன் வந்தது ?

மைய அரசில் மக்கள் நலம் காக்க  ஒரு துறை இருக்கிறது. அதற்கு முதனிலை அமைச்சர் (CABINET MINISTER) இடைநிலை அமைச்சர் (DEPUTY MINISTER) என நான்கைந்து  அமைச்சர்களும்  உள்ளனர். மாநிலங்களிலும் மக்கள் நலத்துறையும் அதற்கென அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் தமது கடமையாகக் கருதுவது  ஒன்றைத்தான். மக்களை நோயாளி ஆகாமல் தடுப்பது அல்ல ! நோயாளி ஆன பின்பு அவர்களுக்குப் பண்டுவம் (TREATMENT) செய்திட புதிய மருத்துவ மனைகளைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவது மட்டுமே !

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நலமுடன் திகழ்ந்த இந்தியக் குடும்பங்கள், இன்று நோயாளிக் குடும்பங்களாகிவிட்டதே என்று இந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது, கவலைப் படுகிறார்களா ? இல்லை ! அதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை ! அவர்கள் கவலை எல்லாம் வேறு விதமாக இருக்கிறது !

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு  ஒரு குறிப்பிட்ட மருந்தினை ஒரு மருந்தாக்க நிறுவனம் (PHARMACEUTICAL COMPANY) அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்துகிறது. அம்மருந்தில் என்னென்ன பொருள்கள் (INGREDIENTS) கலக்கப் பெற்றுள்ளன, அம்மருந்து மெய்யாகவே, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்துகிறதா, பக்க விளைவுகளேதும் ஏற்படுகிறதா  என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்து, அதன்பின் அதைத் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் அனுமதிக்க வேண்டிய மைய அரசு, இப்பணியைச் செய்வது இல்லை. மாநில அரசும் இதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை !

நம்மை ஆள்கின்ற அரசுகள், இந்தப் புலனத்தில் (விஷயத்தில்) தமது கண்களை இறுக மூடிக்கொண்டு விட்டன. இதன் விளைவாக, மருந்தாக்க நிறுவனங்கள், குறிப்பிட்ட நோய்க்கு மருந்து தயாரிப்பதாகச் சொல்லி, வேறுவகை நோய்க்கு நம்மை ஆட்படுத்தும் விதமாகக் கூட்டு மருந்தில் உள்ள ஓரிரு பொருள்களின் (INGREDIENTS)  கலவை வீத அளவைச் சிறிது கூடுதலாக்கி அம்மருந்தினை மெல்லிய நச்சுத் தன்மை உடையதாக  ஆக்கிவிடுகின்றன என ஆய்வாளர்கள் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர் !

ஒரு கூட்டு மருந்து, 10 வகையான பொருள்கள் கலக்கப்பெற்று தயாரிக்கப் பெறுவதாக வைத்துக்கொள்வோம்., கலவைப் பொருள்களுள் ஒருசில (SOME INGREDIENTS), குறிப்பிட்ட நோயைக் குணமாக்கத் தேவையில்லாமல் (NOT NECESSARY) இருக்கலாம். என்றாலும் அவற்றையும் கலந்து, அவற்றின் மெல்லிய  நச்சுத் தன்மை (SLOW POISON)  காரணமாக நம்மை வேறு வகையான நோயாளியாக மாற்றக் கூடிய மருந்தாக அதை உருவாக்கிச் சந்தைப் படுத்தி விடுகின்றனர், என்பது ஆய்வாளர்களின் குற்றசாட்டு.  இதைப்பற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்ட மைய அரசு, ஆய்வு செய்து அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றாததால், மருந்தாக்க நிறுவனங்களின் கமுக்க (SECRET) நடவடிக்கைகளால், நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்திலும் இருக்கும் மென்மையான நச்சுப் பொருள் நம்மை நிரந்தர (PERMANENT) நோயாளி ஆக்கிவிடுகிறது !

எடுத்துக்காட்டாக,  முறைக் காய்ச்சலுக்கு (MALERIA FEVER) மருந்து சாப்பிடும், ஒரு மனிதன், 10 நாள்களில் காய்ச்சலிலிருந்து விடுபடுகிறான். ஆனால் காலப்போக்கில் அவன் நீரிழிவு நோயாளியாகவோ, மூட்டுவலி நோயாளியாகவோ, உயர் குருதி அழுத்த (HYPER TENSION) நோயாளியாகவோ, குண்டிக்காய் செயலிழப்பு (KIDNEY FAILURE) நோயாளியாகவோ மாறிவிடுகிறான் !

மருந்தாக்க நிறுவனங்கள் ஏன் இந்த கமுக்க (SECRET) நடவடிக்கைகளில் இறங்குகின்றன. நோயாளிகள் பெருகினால் தான் மருந்து விற்பனை பெருகும். விற்பனை பெருகினால் தான் கொள்ளை கொள்ளையாகப் பணம் சேர்க்க முடியும். மைய, மாநில அரசுகள் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டால் மருந்தாக்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக தேர்தல் நிதி கிடைப்பது பறிபோய்விடுமே !

மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரும்பான்மையோர் அவர்கள் செய்யக் கூடாததைச் செய்து, நோயாளி ஆவதில்லை. மருந்தாக்க நிறுவனங்களின் பேராசையால், நலமுள்ள மனிதனும் நோயாளி ஆக்கப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை !

மக்களைக் காப்பாற்ற வேண்டிய மைய, மாநில அரசுகளின் செயல்பாடின்மை, மருந்தாக்க நிறுவனங்களின் பேராசை ஆகியவற்றால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளியோ, ஒரு மூட்டு வலி நோயாளியோ இருக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது !

ஆங்கில முறை மருத்துவராக உள்ள நம்மவரே, அவர்களையும் அறியாமல், மருந்தாக்க நிறுவனங்களின் சம்பளமில்லா முகவர்களாக மாறி, ஒரு நோய்க்கு ஏழெட்டு மருந்துகளை எழுதித் தந்து எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர் !

மைய, மாநில அரசுகளின் மக்கள் நலத்  துறை அமைச்சர்கள் இனிமேலாவது தமது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா ? அல்லது  வீட்டுக்கு ஓரிருவரை நிரந்தர நோயாளியாக மாற்றும் மருந்தாக்க நிறுவனங்களின் சூழ்ச்சிக்குத் துணை போவார்களா ? வாக்களிக்கும் மக்கள் தான் விழிப்படைய வேண்டும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்,
[தி.: 2050, சுறவம், 11.]
{25-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------