பக்கங்கள்

வியாழன், ஆகஸ்ட் 06, 2020

சிந்தனை செய் மனமே (78) இயற்கை வளங்களை அழிக்காதீர் - நெய்தல் நிலம் !

அழகிய கடற்கரைகள் பல அமைந்துள்ள நெய்தல் நிலப் பரப்புஇப்பொழுது அதன் அழகை இழந்து வருகிறது.
                                         **********

கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் நிலம்” எனப் பண்டைத் தமிழர்களால் அழைக்கப்பெற்றனகடல் சார்ந்த பகுதிகள் என்பதில் கடலோரத்தில் அமைந்துள்ள சிற்றூர்களும்  அடங்கும் ! கடற்கரை அருகில் வாழும் மீனவர்கள் நெய்தல் நில மக்களில் முகாமையானவர்கள் !

கடற்கரையிலும், சில இடங்களில் அதை ஒட்டிய  உப்பங்கழிகளிலும் நெய்தல் நிலத்திற்கே உரிய சுரபுன்னை, தாழை, அலயாற்றி போன்ற நிலைத் திணைகள் பெருவாரியாக வளர்ந்திருக்கும் ! நாரை, கூழைக்கடா, கொக்கு, சிறவி, ஆலா  போன்ற பறவை இனங்களும் நிரம்பக் காணப்படும் !

அழகிய கடற்கரைகள் பல அமைந்துள்ள நெய்தல் நிலப் பரப்பு, இப்பொழுது அதன் அழகை இழந்து வருகிறது. உப்பளங்களில் பல பெரு முதலாளிகள் உப்புக் காய்ச்சும் தொழிலில் பெருவாரியாக மக்களையும், எந்திரங்களையும் பயன்படுத்தி வருவதால், அங்கு கழிவுப் பொருள்கள்  குவிந்து தூய்மை நிலையைச் சீர்குலைத்து வருகிறது !

கடற்கரையை ஒட்டிய ஊர்களில் இறால் பண்ணைகள் ஆயிரக் கணக்கில் தோன்றி அங்குள்ள விளை நிலங்களை எல்லாம் களர் நிலங்களாக மாற்றி வருகின்றன. காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடலோரச் சிற்றூர்களில் நெல் விளைவிக்கும் நிலங்களில், கடல்நீரைத் தேக்கி இறால் பண்ணைகள் அமைத்திருப்பதால், அங்கெல்லாம் நிலவளம் கெட்டுப் போய்விட்டது !

அரசின் தவறான கொள்கைகளால், இறால் பண்ணைகள் பெருகி, நிலவளத்தை இழந்துவிட்டோம். களராகிப்போன ஒரு நிலத்தை மீண்டும் நெல் விளைவிக்கும் நிலமாக மாற்ற நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகும். இயற்கை தந்த கொடையான நெல்விளையும் நெய்தல் நிலங்களை மனிதன் சீரழித்துவிட்டான் !

காடுகளையும் மலைகளையும் சீரழித்து மழைப் பொழிவைக் குறைத்துவிட்ட மனிதன், நெய்தல் நிலப் பகுதிகளில் நிலத்திற்குள் தேங்கி நிற்கும் நீரையும் பல்வேறு காராணங்களைச் சொல்லி உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறான். நிலத்தடி நீர், குடிநீருக்காகவும் எடுக்கப்படுகிறது; குளிநீருக்காகவும் எடுக்கப்படுகிறது; ஆலைகளின் தேவைக்காகவும் எடுக்கப்படுகிறது !

இப்படி வரைமுறையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால், கடல் நீர் அந்த இடங்களில் ஊடுறுவுகிறது. ஒரு இடத்தில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், அங்கு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீர் அந்த இடத்தை நோக்கி ஊடுறுவுவது இயல்பு தானே !

கடற்கரையோர நெய்தல் நிலங்களில், அதிக விசையுடன் உமிழிகள் (MOTOR PUMPS)  மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்போது  அருகில் உள்ள கடலிலிருந்து உவர் நீர், உள்ளே புகத்தானே செய்யும் ! ஆட்சியில் இருப்போருக்கு இந்த உண்மை தெரியாதா ?  

வல்லுநர்களும், அறிஞர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான், இத்தகைய அழிவுகளைத் தடுக்க முடியும். இதே நிலை நீடித்தால், அடுத்த நூற்றாண்டில் தமிழ் நாட்டின் கடற்கரையோரம் நெடுகிலும் அமைந்துள்ள அனைத்து ஊர்களும் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத ஊர்கள் ஆகிவிடும் !

இவ்வாறு நெய்தல் நிலத்தின் இயற்கை வளத்தை அழித்து வரும் மனிதன், கடலையும் விட்டு வைக்க வில்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளும் குடியிருப்புக் கழிவு நீரும் ஆலைக் கழிவு நீரும் வெளியேறும் வடிகால்களாக மாறி வருகின்றன. இந்தக் கழிவு நீர் இறுதியில் கடலில் தானே சென்று கலக்கிறது !

சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொற்றலையாறு ஆகியவை ஒவ்வொரு நாளும் கடலுக்குள் வெளியேற்றும் கழிவு நீரின் அளவை யாராவது   கணித்துப் பார்க்க முடியுமா ?

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரவருணி மற்றும் அவற்றின் கிளை ஆறுகள் எல்லாம் கழிவு நீரைக் கடலுக்குள் கொண்டு செல்லும் வடிகால்களாகத் தானே பயன்படுத்தப் படுகின்றன. ஆறுகளை ஆறுகளாக இருக்க விடாமல், அவற்றைக் கழிவு நீர் வடிகால்களாக மாற்றி கடல் நீரை மாசு படுத்தி வரும் மனிதன், கடலும் கடல் சார்ந்த பகுதிகளான நெய்தல் நிலத்தை பேரளவுக்குச் சீரழித்து விட்டான் !

தவறான நம்பிக்கைகளால், இராமேசுவரம் கடல் துறை எத்துணை மாசு படிந்து இருக்கிறது.  அங்கு செல்லும் மக்கள். கடல் துறையில், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, அரிசி என்று எதை எதையோ கடல் நீரில் விடுவதுடன், தாம் உடுத்தி இருக்கும் துணிகளையும் அல்லவா, கடலுக்குள் விட்டு நீர்த்துறையைக் குப்பை காடாக்கி வருகின்றனர் !

ஆன்மிகத்தின் பெயரால் கடல்நீரை மாசுபடுத்தும் இத்தகைய செயல்கள், இராமேசுவரம் மட்டுமல்ல, கடற்கரையோரப் பட்டினங்கள் அனைத்திலும் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்துவதற்கு ஆன்மிகத் தலைவர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும் !

ஆற்று நீருடன் இயற்கையாகவே இழுத்து வரப்படும் செடி கொடிகள், புதர்கள், மரங்கள் அல்லாது, ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைக் கூளங்களும் அல்லவா கடலுக்குள் சென்று அதை மாசு படுத்துகிறது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், கடலுக்குள் நடத்தப்படும் அணுக்குண்டு (ATOM BOMB), நீர்வளிக் குண்டு (HYDROGEN BONB), சோதனைகள் எல்லாம், கடல் நீரை மேலும் மேலும் மாசு படுத்தி வருகிறது !

தானே வல்லவன், இயற்கையின்  படைப்புகள் எல்லாம் தனக்காகவே என்ற மனிதனின் தன்முனைப்பு (ஆணவம்) எண்ணத்தின் விளைவாக, கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் அடங்கிய நெய்தல் நிலம் மிகு விரைவாகச் சீரழிந்து வருகிறது !

இயற்கையைச் சீரழிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை ! மனிதன் இதை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், ஆழிப்பேரலை, கொடும் புயல், கொள்ளை நோய் போன்ற தாக்குதல்களால் மனிதக் குமுகாயமே அழிந்து போகும் நிலை என்றாவது ஒரு நாள் உருவாகியே தீரும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),20]
{04-08-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------