பக்கங்கள்

வெள்ளி, டிசம்பர் 06, 2019

வரலாறு பேசுகிறது (03) வீரமா முனிவர் !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய  தொடர் !

வீரமா முனிவர் !


தோற்றம்:

வீரமாமுனிவர் 1680 –ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 8 –ஆம் நாள் இத்தாலி நாட்டில் உள்ள காத்திக்கிளியோனே என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் கொண்டால்போ பெசுகி. தாயார் எலிசபெத் அம்மையார்.  வீரமா முனிவருக்கு அவரது பெற்றோர் சூட்டிய  பெயர் கான்சுடண்டைன் சோசப் பெசுகி !

கல்வி:

பெசுகியாரின் இளமை வாழ்க்கையை முற்றிலும் அறிந்து கொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. தம்மூரில் உள்ள பள்ளியில் முதலில் கல்வி பயின்று வந்த இவர், பின்பு உரோமை (ROME) நகர் சென்று அங்கு கல்வி கற்றார். தம் தாய் மொழியான இத்தாலியில் ஓரளவு புலமை பெற்ற பின் உளவியல் நூல் (PSYCHOLOGY), சமய நூல் முதலியவற்றைப் பயின்றார் !

கிறித்து பெருமான் மீது பேரன்பு கொண்டிருந்த பெசுகியார், தமது 18 –ஆம் அகவையில் துறவு பூண்டு இயேசு திருச்சபையில் அடியவராய்ச் சேர்ந்து தம் வாழ்க்கையை இறைவன் திருப்பணிக்கு உரிமையாக்கினார் !

சமயப் பரப்புநர்ப் பயிற்சி:

இறைவன் திருப்பணிக்குத் தம்மை உரியவராக்கிய பெசுகியார், உரோமை நகரிலிருந்த கத்தோலிக்கப் பாதிரிமார் கழகத்தில் சேர்ந்து, சமயம் பரப்புநர்க்குரிய பயிற்சி பெறலானார். சிறிது காலம் இலக்கண ஆசிரியராகப் பணியாற்றிய பெசுகியார் அளவையியல் (LOGIC), மெய்யியல் (PHILOSOPHY) ஆகிய கலைகளையும் கற்றார்.!

குருப்பட்டம்

பிரஞ்சு, கிரேக்கம், எபிரேயம், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளையும் கற்று அவற்றில் புலமையும் பெற்றார். கி.பி 1709 –ஆம் ஆண்டு குருப் பட்டம் பெற்றார். இயேசு பெருமானாரிடம் பயன்கருதாப் பக்தி பூண்டிருந்த பெசுகி அடிகளார், அப்பெருமானின் புகழைப் பரப்பப் பாரத நாட்டின் தென் பகுதியில் இருந்த தமிழ் நாட்டைத் தெரிவு செய்தார் !

இந்தியா வருகை:

கி.பி.1711 –ஆம் ஆண்டு பெசுகி அடிகளார் கோவா வந்தடைந்தார். அங்கு நிறுவப்பட்டிருந்த வேத சாத்திரக் கல்லூரியில் ஒரு திங்கள் தங்கியிருந்து, தாம் மேற்கொள்ளப் போகும் புதிய பணிக்குத் தக்கவாறு பயிற்சி பெற்றார். சிறிதளவு தமிழும் அங்கு பயின்றார் !

மதுரை வருகை:

பிறகு கோவாவிலிருந்து கொச்சி துறைமுகம் வந்து அங்கிருந்து மதுரை மாவட்டம் வந்தடைந்தார். அக்காலத்தில் மதுரை மாவட்டத்தில் நிறுவப்பெற்றிருந்தமதுரை மிஷன்என்னும் கத்தோலிக்க சேவை அமைப்பின் அலுவலகத்திற்கு வந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ! மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியைத் தம் நிலைக்களமாகக் கொண்டு, பணியாற்றத் தொடங்கினார் !

பெயர் மாற்றம்:

தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்து ஒன்றிப் பழகினால், தமது மதப் பரப்புரை எடுபடும் என்பதை உணர்ந்தார். தமிழுக்கு முதன்மை கொடுத்து தமிழும் சமயமும் தழைக்கும் வகையில் தொண்டாற்ற உறுதிகொண்டார் ! தமிழரோடு தமிழராய்க் கலந்து உறவாட எண்ணினார். ”கான்சுடண்டைன் சோசப் பெசுகிஎன்னும் தமது பெயர் அதற்குத் தடையாய் இருப்பதை உணர்ந்து தமது பெயரைதைரியநாதர்என்று மாற்றிக் கொண்டார் ! இப்பெயரே பின்னாளில்வீரமா முனிவர்என்னும் விழுமிய பெயராய் வழங்கலாயிற்று !

தமிழ் கற்றல்:

மதப் பரப்புரைக்குத் தமிழில் போதிய புலமை தேவை என்பதை உணர்ந்து தமிழை ஆர்வமுடன் கற்கலானார். தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. பழநி நகரில் வாழ்ந்து வந்தசுப்ரதீபக் கவிராயர்என்னும் பெரும்புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்கலானார். திருவாசகம் முதலிய பல நூல்களை மனப்பாடம் செய்து பாடிப் பழகினார் ! தமிழ் இலக்கணத்தை முற்றாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். யாப்பிலக்கணம் அவருக்கு எளிதாக மனப்பாடம் ஆயிற்று ! தமிழ் எழுத்துகளையும், சொற்களையும்  திருத்தமாகப் பலுக்கும் (உச்சரிக்கும்) கலை அவருக்குக் கைவரப் பெற்றது !

தமிழ்த் துறவி:

தமிழ்ப் பயிற்சியால் முற்றிலும் தமிழராய் மாறிய தைரியநாதர், நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டும், பாதக் குறடு அணிந்து கொண்டும் மக்களுடன் பழகலானார். காதில் முத்துக் கடுக்கன் அணிந்தார்; உடலில் காவி உடை  தரித்தார். முற்றிலும் தமிழ்த் துறவியாக மாறிய தைரியநாதர் மரக்கறி உணவையே உண்டு வாழ்ந்து வந்தார். அவரைத் தமிழர், தமிழ் முனிவராகவே கொண்டு போற்றினர் ! தைரிய நாதர் வீரமாமுனிவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார் !

ஏலாக்குறிச்சி ஆலயம்:

தஞ்சைக்கு 20 கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்னும் ஊரில் அடைக்கலமாதா ஆலயத்தை நிறுவினார். அவ்வூருக்குதிருக்காவலூர்என்றுப் பெயரிட்டு அழைத்தார். இவ்வூரைப் பற்றிய அவரது பாடல் தொகுதிதிருக்காவலூர்க் கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது !

இலக்கியம் படைப்பு:

இஃதன்றி, திருக்காவலூர் அடைக்கல மாதாவின் பெயரில் அடைக்கலநாயகி வெண் கலிப்பா, அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கருணாம்பரப் பதிகம், கித்தேரியம்மாள் அம்மானை என்னும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார் !

தேம்பாவணி:

மக்கள் மனதிலே அழியாத இடம்பிடித்துள்ளபரமார்த்த குரு கதைஉங்களுக்கு நினைவிருக்கிறதா ? அதைப் படைத்தவர் வீரமா முனிவரே ! ”சதுரகராதிஎன்னும் தமிழ் அகரமுதலியை உருவாக்கியவரும் வீரமாமுனிவரே !  இவர் படைத்துள்ள பல இலக்கியங்களுள் தேம்பாவணி மிகமிகப் புகழ் பெற்ற இலக்கியமாகும். தேம்பாவணியீலிருந்து ஒரு பாடல்:-
------------------------------------------------------------------------

அறக்கடல் நீயே; அருட்கடல் நீயே;
..........அருங்கரு ணாகரன் நீயே !
திறக்கடல் நீயே; திருக்கடல் நீயே !
..........திருந்துளம் ஒளிபட ஞான
நிறக்கடல் நீயே; நிகர்கடந் துலகில்,
...........நிலையும்நீ; உயிரும் நீ; நிலைநான்
பெறக்கடல் நீயே; தாயும்நீ எனக்குப்
...........பிதாவும்நீ. அனைத்தும்நீ அன்றோ ?

--------------------------------------------------------------------------

மறைவு:

எழுத்துச் சீர்திருத்தம் போன்ற பல்வகைத் தொண்டுகளைத் தமிழுக்கு ஆற்றியவர் வீரமாமுனிவர்.  இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்தில் பாடிப் பறந்த இந்த வெள்ளைக் குயில், தம் 67 –ஆம் அகவையில் 1747 –ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள், 4 –ஆம் நாள் தன் இறுதி மூச்சை தமிழ் மண்ணில் படரவிட்டுப் அடங்கிப் போயிற்று !

நம் கடமை:

இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகத்திற்கு வந்து, தமிழைக் கற்றுப் புலமை பெற்று, காப்பியங்கள் படைக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற வீரமாமுனிவர் போன்றவர்கள்  முன்னால், தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் தடுமாறும் நாம் சிற்றெறும்புகளாக அல்லவோ கூனிக் குறுகி நிற்கிறோம் !

இத்தாலியில் பிறந்து வளர்ந்த தமிழரல்லாத ஒருவர் தமிழைக் கற்றுக் கொண்டு, பெரும் புலமை பெற முடிகிறது; ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நாம் தமிழில் புலமை பெற முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் நமது கருத்தின்மையும், உணர்வின்மையும், மடிமையுமே அன்றோ ?

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,நளி (கார்த்திகை) 19]
{5-12-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------



வரலாறு பேசுகிறது (02) உ.வே.சா !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !

.வே.சா. [உத்தமதானபுரம் வே.சாமிநாத ஐயர்]



முன்னுரை:

தமிழ்த் தாத்தா என்று தமிழ் கூறும் நல்லுலகால் அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா அவர்கள் பிறந்த ஊரின் பெயர் உத்தமதானபுரம். திருவாரூர் மாவட்டம். வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர், (தஞ்சை மாவட்டம்) பாபநாசத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது !

தோற்றம்:

கி.பி.1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் உத்தமதானபுரத்தில் உ.வே.சா எனப்படும் சாமிநாதன் பிறந்தார். இவரது தந்தை பெயர் வேங்கடசுப்பு ஐயர். தாயார் சரசுவதி அம்மாள் !

குடும்பம்

இவரது தந்தை இசைக்கதைக் கலைஞராக (அரிகதா காலட்சேபக் கலைஞர்) இருந்தமையால், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடைபெற்று வந்தது. இருப்பினும் வருமானம் போதாமையால், பிழைப்பு நாடி இவர்கள் குடும்பம் பல ஊர்களுக்கும் இடம் பெயர நேர்ந்தது !

கல்வி:

உத்தமதானபுரம் வேங்கடசுப்பு ஐயர் சாமிநாதன் எனப்படும் உ.வே.சா. தனது தொடக்கக் கல்வியையும் இசைக் கல்வியையும் சொந்த ஊரில் இருந்த திண்ணைப் பள்ளி ஆசிரியர்களிடம் கற்றார். சடகோப அய்யங்கார் என்னும் ஆசிரியரே இவருக்குத் தமிழின்பால் ஆர்வத்தைத் தூண்டிவிட்டவர். தனது தந்தையின் நண்பரான சிதம்பரம் பிள்ளை என்னும் ஆசிரியரிடம்  திருவிளையாடற்புராணம் முதலிய நூல்களைக் கற்றார் !

சிலகாலம் விருத்தாசலம் ரெட்டியார் என்பவரிடம். .வே.சா. சில தமிழ் நூல்களைக் கற்றறிந்தார்.  பின்பு, அவரது 17 ஆம் அகவையில் நாகை மாவட்டம் திருவாடுதுறை திருமடத்தில் தமிழ் கற்பித்துவந்த மகாவித்துவான் திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் அவரிடம் தமிழ் பயின்றார்.

திருமணம்:

அக்கால வழக்கப்படி உ.வே. சாமிநாதனுக்கு  அவரது 14 -ஆம் அகவையில் திருமணம் நடந்தது. மணப் பெண்ணின் அகவையோ எட்டு. .வே.சா பிறந்தது முதலே வறுமையைச் சந்தித்து வந்த அவரது தந்தை உள்ளிட்ட குடும்பம், திருமணச் செலவுக்குக் கூட பொருளின்றித் தவித்தது. ஊராரின் உதவியால் தான், திருமணம் நடந்தேறியதாக உ.வே.சா. அவரது தன்வரலாற்றில் குறிப்பிடுகிறார் !

திருமடத் தலைவர் உதவி

திருவாவடுதுறை (ஆடுதுறை) சிவத் திருமடத்தில் தங்கி, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்று வந்ததால், அம் மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், .வே.சா மீது பரிவும் அன்பும் கொண்டிருந்தார். .வே.சா. வின் குடும்பம் வறுமையில் உழல்வதை அறிந்த திருமடத்தின் தலைவர், மடத்தின் வளாகத்தில் இருந்த ஒரு வீட்டில் அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் தங்கி வாழ்ந்து வர இசைவளித்தார் ! .வே.சா.வின் வாழ்க்கை உயர்வுக்கு திருவாவடுதுறை மடம் பல்லாற்றானும் பெருமளவில் உதவி புரிந்திருக்கிறது !

ஆசிரியப்பணி:

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த தியாகராயச் செட்டியாரின் உதவியால், .வே.சா. அவர்களுக்கு அக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியமர்த்தம் கிடைத்தது. சென்னை மாநிலக் கல்லூரியிலும் சில காலம் உ.வே.சா. தமிழாசிரியராகப் பணியாற்றினார். !

நூல் வெளியீடு

பனையோலைச் சுவடிகளில் இருந்த சீவக சிந்தாமணியை புத்தகமாகப் பதிப்பித்து 1887 ஆம் ஆண்டு வெளியிட்டார்.. .வே.சா. வின் முதல் வெளியீடு இதுவே. அதன் பின்பு, ஊர் ஊராகச் சென்று பனையோலைச் சுவடிகளாக இருந்த இலக்கியங்களை எல்லாம் திரட்டி, அவற்றைப் புத்தகங்களாகப் பதிப்பித்து வெளியிடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் !

ஓலைச் சுவடித் திரட்டு:

தமிழ் இலக்கியங்கள் எதுவும் புத்தக வடிவில் இல்லாத காலம் அது ! அனைத்து இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளாகவே இருந்தன. அவ்வோலைச் சுவடிகளும் ஒருவரிடம் மட்டுமே இல்லாமல் ஆயிரக் கணக்கான மாந்தர்களிடம் பரவலாக்  கிடந்தன. ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அஃது  ஒருவரிடம் மட்டுமே இல்லாமல், பல்படிகளாக (MULTI COPIES)  பலரிடம் இருந்தன ! ஊர் ஊராக அலைந்து திரிந்து, சுவடி வைத்திருப்போரிடம் இரவலனைப் போல், கெஞ்சிக் கேட்டு, திரட்டிக் கொண்டு வரும் பணியில் தன் வாழ்நாளை எல்லாம் செலவிட்டார் உ.வே.சா. !

நூற்பதிப்பு:

ஒன்றுக்கும் மேற்பட்டப் படிகளாக  ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்து, சிதைவுற்ற பாடல் அடிகளையும் சொற்களையும் கண்டறிந்து அதைப் புத்தகமாக வெளிக் கொணரும் பணி எளிதான செயலாக அவருக்கு இருக்க வில்லை ! இராப் பகலாக கண்விழித்து, ஓலைச் சுவடிகளை ஒப்பிட்டு, முழு நூலாக அவர் வெளியிட்ட இலக்கியங்கள் ஏராளம் ! ஏராளம் !

சங்க இலக்கியங்கள்:

அழிந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை அச்சிட்டுப் பதிப்பித்தார் உ.வே.சா. இவ்வாறு அவர் பதிப்பித்த இலக்கியங்களில் திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,  போன்ற தொண்ணூறு நூல்கள் அடங்கும்.

அச்சுப்பதித்த நூல்கள்

சங்க இலக்கியங்களன்றி, புராணங்கள் 12, பெருங்கதைகள் 9, தூது நூல்கள் 6, வெண்பா நூல்கள் 3, அந்தாதி நூல்கள் 2, பரணி நூல்கள் 2, மும்மணிக் கோவை நூல்கள் 2, இரட்டை மணிமாலை நூல்கள் 2, சிற்றிலக்கியங்கள் 4 ஆகியவற்றையும் உ.வே.சா ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டெடுத்துப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார் !

மதிப்புறு முனைவர்

தமிழுக்கு அரும்பெருந் தொண்டாற்றிய உ.வே.சா அவர்களுக்கு சென்னைப் பலகலைக் கழகம் 1932 ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப் படுத்தியது !

புகழுடம்பு எய்தல்

தன் வாழ்நாளெல்லாம் தமிழ்ப் பணியே தன் தலையாய பணி என்று தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் தனது 87 ஆம் அகவையில் புகழுடம்பு எய்தினார் !

தனது தமிழ்ப் பணி மூலம் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் உ.வே.சா ! தமிழ்ப் பணிமன்றம் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் ?


-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: நளி (கார்த்திகை) 18]
{4-12-2019}


-------------------------------------------------------------------------------------------------------------
        
  தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------





வரலாறு பேசுகிறது (01) பரிதிமாற் கலைஞர் !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !


பரிதிமாற் கலைஞர் !



தோற்றம்:

மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றுர் விளாச்சேரி. இங்கு கி.பி.1870 -ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 6 –ஆம் நாள் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரிய நாராயண சாத்திரி (சாஸ்திரி) பிறந்தார். தந்தை பெயர் கோவிந்த சிவன் சாத்திரியார். தாயார் இலட்சுமி அம்மாள் !

தொடக்கக் கல்வி:

சிறு அகவையிலேயே, இவர் தன் தந்தையார் மூலம் வடமொழி கற்றுக் கொண்டார். பின்பு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து தமிழும் கணிதமும் கற்றார். மதுரையை அடுத்த பசுமலையில் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பாலகிருட்டிண நாயுடு என்பவரிடம் சிலம்பம், மற்போர் போன்ற கலைகளையும் கற்றுக் கொண்டார் !

பள்ளிக் கல்வி:

பின்னர், மதுரை நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் 1885 –ஆம் ஆண்டு சேர்ந்தார்.  அங்கு மகாவித்துவான் க. சபாபதி முதலியாரிடம் தமிழ்ப் பாடம் பயின்று  தமது  தமிழறிவைப் பெருமளவு வளர்த்துக் கொண்டார் !

திருமணம்:

சூரிய நாராயண சாத்திரி, தனது பத்தொன்பதாவது அகவையில் முத்துலட்சுமி என்னும் மங்கையை மணம் புரிந்து இல்லற வாழ்வைத் தொடங்கினார். ஒரு பெண் குழந்தையும், இரு ஆண் குழந்தைகளும் இவ்விணையருக்குப் பிறந்தனர் !

கல்லூரிப் படிப்பு:

பின்னர், சென்னை வந்து, அங்குள்ள கிறித்தவக் கல்லூரியில் கலையியல் வாலை (B.A) வகுப்பில் சேர்ந்து  தமிழில் மேற்படிப்பைத் தொடங்கினார். அப்போது அங்கு கல்லூரி முதல்வராக முனைவர் வில்லியம் மில்லர் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் சுகாட்லாந்துக் (SCOTLAND) காரர். பெரும் செல்வந்தரான வில்லியம் மில்லர், தான் ஈட்டும் வருவாயை எல்லாம் கல்விக்காகச் செலவிடுபவர். அவர் ஆங்கில இலக்கியப் பாடம் நடத்துவதை மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கேட்டு  மகிழ்வது  வழக்கம் !

ஒருமுறை முனைவர் வில்லியம் மில்லர் தென்னிசன் (TENNYSON) எழுதியஆர்தரின் இறுதி நாள்என்ற பாடலின் பகுதியில் வரும் உவமையைப் பற்றி  எடுத்துக் கூறினார். துடுப்புகள் இருபுறமும் நீரைப் பின்னோக்கித் தள்ள, நீரில்மிதந்து போகும் படகு, பறவை தன் சிறகுகளை விரித்து விசிறியபடிக் காற்றில் நீந்திச் செல்வது போல் உள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, இது போன்ற உவமையை, உமது தமிழ் இலக்கியத்தில் காட்ட முடியுமா, என்று வினவினார் !

சிறிதும் தாமதியாமல் சூரிய நாராயணன் எழுந்துநீங்கள் போற்றும் தென்னிசன் பிறப்பதற்கு ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே, எங்கள் கவிமாமன்னன் கம்பன் இந்த உவமையைக் கையாண்டுள்ளார்என்றார். அத்துடன், அயோத்திக் காண்டத்தில் குகப் படலத்தில் வரும்,

-----------------------------------------------------------------------------------------------

விடுநனி  கடிதுஎன்றான் மெய்உயிர்  அனையானும்
முடுகினன் நெடுநாவாய்;  முரிதிரை  நெடுநீர்வாய்;
கடிதினின், மடஅன்னக்  கதியது  செலநின்றார்
இடருற மறையோரும்  எரியுறு  மெழுகானார்
-
-----------------------------------------------------------------------------------------------

என்னும் பாடலைப் பாடிக் காட்டியவுடன் மில்லர் எழுந்து வந்து கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார் !

பட்டப்படிப்பில் சிறப்பிடம்:

அன்றிலிருந்து சூரிய நாராயணன் மீது முனைவர் வில்லியம் மில்லருக்கு அளவுகடந்த அன்பும் மதிப்பும் ஏற்பட்டது ! தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்,  கல்லூரிப் படிப்பின் போது  கலையியல் வாலை (B.A)  வகுப்பில் தமிழிலும், மெய்யியல் பாடத்திலும் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் !

சூரியநாராயணனின் திறமையையும் புலமையையும் கண்ட முனைவர் வில்லியம் மில்லர் அவரை அக்கல்லூரியிலேயே மெய்யியல் துறையில் ஆசிரியராகப் பணிமர்த்தம்  செய்ய முடிவு செய்தார். ஆனால், தமிழின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சூரியநாராயணன், தமிழ்த் துறையில் ஆசிரியப் பணி வேண்டினார் !

பணியமர்வு:

அவரது தமிழார்வத்தைப் புரிந்து கொண்ட முனைவர் மில்லர் சென்னை, கிறித்தவக் கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணியமர்த்தம் செய்ததுடன், மெய்யியல் துறை ஆசிரியர் போன்று உயர்ந்த ஊதியத்தையும் அளிக்க உத்தரவிட்டார் !

சூரிய நாராயணன் தமிழ்ப் பாடம் நடத்துகையில் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்துவிடுவார். அவரது விரிவுரையில் மனம் மயங்கி மாணவர்கள் தேன் குடித்த வண்டாக இன்புறுவர்.  தமிழ்ப் பாடத்தில் மனம் ஒட்டாது கருத்தின்றி யாராவது இருந்தால் அம் மாணவரிடம் கண்டிப்புக் காட்டுவார் !
ஒருமுறை இத்தகைய மாணவர் ஒருவரைக் கண்டிக்கும் வகையில்நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய் ! நீ இங்கிருப்பதால் உனக்கோ, பிறருக்கோ பயனிலை ! இங்கிருந்து உன்னால் செயப்படு பொருள் யாதொன்றும் இல ! ஆதலால் வகுப்பில் இருந்து வெளியே செல்க !” என நயம்பட உரைத்து வெளியேற்றினார் !

ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன் கலாவதி (1898), உரூபாவதி என்னும் நாடக நூல்களை எழுதி, தாமே அப்பெண்களாகவும் நடித்தார். அராவ ஆண்டகை சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களால்திராவிட சாத்திரிஎனச் சிறப்பிக்கப்பட்டார் !

எழுதிய நூல்கள்:

சூரியநாராயண சாத்திரி எழுதிய நூல்கள் உரூபாவதி, கலாவதி, மான விசயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, மதிவாணன், நாடகவியல், தமிழ் விசயங்கள், சித்திரக் கவி விளக்கம், சூர்ப்பநகைபுராண நாடகம் ஆகியவை ! இவர் பதிப்பித்த நூல்கள் சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, மகாலிங்க ஐயர் எழுதிய இலக்கணச் சுருக்கம், புகழேந்திப் புலவரின் நளவெண்பா, உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ், தனிப் பாசுரத் தொகை ஆகிய ஐந்து நூல்கள் !

பெயர் மாற்றம்:

தமிழ்நாடெங்கும் வடமொழி புகுந்து மணிப்பவள நடை என்ற பெயரில்  தமிழின் தனித் தன்மைக்கு மாபெரும் கேடு விளைவித்து வந்த நிலையில், சூரிய நாராயணன் தமிழின் மேல் அவர் கொண்ட அளவுகடந்த பற்றினால், தனது பெயரை வடமொழி கலவாத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார் ! (சூரியன் = பரிதி; நாராயணன் = மால்; சாத்திரி = கலைஞன்).

செம்மொழி:

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, உலக மொழிகளிலேயே தமிழ் தான் உயர்தனிச் செம்மொழி என்று உலகுக்கெல்லாம் அறிவித்து முதன் முதல் உரக்கக் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அதுமட்டுமன்றி வெள்ளையரால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்குத் தமிழர்கள்  அடிபணியவும் கூடாது ! அடிமை ஆகவும்  கூடாது என்று ஆணித்தரமாக வாதுரை செய்தவர் பரிதிமாற் கலஞர் !

மறைவு:

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதர் 1903 –ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் 2 –ஆம் நாள், தமது 33 –ஆம் அகவையில் மறைவுற்றார். இவரது மறைவை அறிந்த மேனாள் கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் பின்வருமாறு எழுதினார்:-
நான் என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகிறேன்; ஆனால் நடுஅகவை வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப் பரிதி அகன்றானே !”

வடமொழியை ஏத்திப் பிடிக்கும் பார்ப்பனர் குலத்தில் பிறந்தாலும் பைந்தமிழின் மேல் பற்று வைத்த பரிதிமாற் கலைஞர் தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்றால் அது மிகையாகாது ! 116 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பரிதிமாற் கலைஞருக்கு இருந்த தமிழ்ப்பற்று இப்போது வாழும் நமக்கு இல்லையே !


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,நளி (கார்த்திகை)17]
{3-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------

     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------