பக்கங்கள்

திங்கள், அக்டோபர் 07, 2019

சிந்தனை செய் மனமே (46) அரசு அலுவலருக்கு ஓய்வூதியம் தேவையா ?

அரசு அலுவலர்கள்  தொழில் எதுவும் செய்யக் கூடாது பகுதி நேரப் பணியில்  சேரக் கூடாது !



அரசுப் பணியில் அமரும் ஒவ்வொரு ஊழியரும் அரசு அலுவலர் நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். நடத்தை விதிகளை மீறுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பணியிலிருந்து நீக்கப்படத் தக்கவர்கள் ஆவர். அரசு அலுவலர் நடத்தை விதிகள் மொத்தம் 20 உள்ளன !

ஒரு அரசு அலுவலர் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது, எப்படியெப்படி  இருக்க வேண்டும், எப்படியெல்லாம்  இருக்கக் கூடாது, எதையெதைப் பணம் கொடுத்து வாங்கலாம், எதையெதை வாங்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்படுத்துபவை இந்த விதிகள் !

ஒரு அலுவலர் 28 அகவை ஆகும் போது பணியில் சேர்வதாக வைத்துக் கொள்வோம். பணியில் சேர்ந்தவுடன், தன்னிடமுள்ள அசையும் சொத்து, அசையாச் சொத்து விவரங்களைப் பட்டியலிட்டு, அலுவலகத் தலைவரிடம்  ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒப்படைத்த பின்பு, அவர் எந்தச் சொத்து வாங்கினாலும், அதை வாங்குவதற்குப் பணம் ஏது என்று கணக்குக் காட்டி, துறைத் தலைமை அலுவலரிடம் இசைவாணை பெற்ற பின்பே அதை வாங்க முடியும் !

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர்விட்டு ஊர் மாற்றுவார்கள். தூத்துக்குடியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள  செங்கற்பட்டுக்கும், நாகப்பட்டினத்தில் இருந்து நெடுந் தொலைவில் இருக்கும் ஓசூருக்கும், இடமாறுதல் செய்யப்படும் நேர்வுகளும் உண்டு. சில துறைகளில் மட்டும் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இடமாறுதல் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த ஊருக்கு அவர் தன் குடும்பத்தினருடன் இடம்பெயர வேண்டும். அங்கு சென்று தன் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடம் தேடி அலைந்து, நன்கொடை தந்து, பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் !

தனது சம்பளத்திலிருந்து தான் அவர் மருத்துவச் செலவு, உறவினர் வீட்டுத் திருமணச் செலவு, திருமண மொய்ச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, தாய் மாமன் சீர் செலவு, கோவில் நேர்த்திக் கடன் செலவு, ஆடை அணிகலன்கள் செலவு, வீட்டுவாடகைச் செலவு, உள்பட அனைத்தையும் சமாளித்து, குடும்பச் செலவுகளையும் கவனிக்க வேண்டும் !

ஒரு அலுவலரின் பதவி நிலை உயர உயர அவருக்குச் செலவுகளும் கூடிக் கொண்டே வரும்.  ஏனெனில் பதவி நிலைக்குத் தக்கவாறு மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் (TO KEEP UP THE STATUS) அவருக்கு ஏற்படுகிறது. !

இந்த நிலையில் அவரது சம்பளத்திலிருந்து சிறிய தொகையாவது சேமிக்க அவர் முயன்றாலும் முடிவதில்லை. அவர் வாங்கும் சம்பளம் ஒரு குடும்பத்தை நல்ல முறையில் பேணுவதற்குப் போதுமானதாக இராது. இந்தச் சூழ்நிலையில் அவரது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி வருமான வரியாக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் அல்லது பிப்ரவரி மாதச் சம்பளத்திலுருந்து ஒரே தடவையாகப்  பிடித்தம் செய்யப்பட்டு சம்பளமின்றி வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்லும் நேர்வுகளும் உண்டு !

அரசு அலுவலர்கள் தமக்கு இடப்பட்ட பணிகளைத் தான் செய்கிறார்கள். தொழில் ஏதும்  செய்வதில்லை. எனினும் ஆண்டுக்கு இருமுறை தொழில்வரி என்று ஒரு தொகையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் !

அரசு அலுவலர்கள் நடத்தை விதிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா ? அந்த நடத்தை விதித் தொகுப்பில் உள்ள விதி எண் 8 , அரசு அலுவலர்கள் தனியாகத் தொழில் எதுவும் செய்யக் கூடாது, வேறு யாரிடத்திலும் பகுதி நேரப் பணியில்  சேரக் கூடாது, பகுதிநேரமாக வருமானம் ஈட்டும் எந்த செயலிலும்  ஈடுபடக் கூடாது என்று முற்றிலுமாகத் தடை செய்கிறது.  இதை மீறினால் அரசுப் பணியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என உரைக்கிறது  அரசு வகுத்துள்ள  விதிகள் ! 

சுருங்கச் சொன்னால், ஆசிரியர்கள் உள்பட அரசு அலுவலர் எவரும், அரசுப் பணியில் சேர்ந்தநாள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வரை, அவரது சம்பளத்தை மட்டுமே நம்பிப் பிழைப்பை நடத்த வேண்டும் என அரசு  எதிர்பார்க்கிறது. அரசின் இத்தகைய கடுமையான விதிகளினால், பணி ஓய்வு பெற்ற பின்பும் சொந்த வீட்டுக்கு வாய்ப்பின்றி வாடகை வீட்டிலேயே காலம் தள்ள வேண்டிய துன்ப நிலை 60 % ஓய்வூதிய ஆளிநர்க்கு இன்றும் இருக்கவே செய்கிறது !

சரி ! ஒரு அலுவலர் தன் சம்பளத்திலிருந்து குருவி சேர்ப்பது போல் சிறுகச் சிறுகச் சேர்த்து, தனது பிள்ளைகளின் படிப்புத் தேவையை நிறைவேற்றுகிறார். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் திருமணத்தையும் தட்டுத் தடுமாறி நடத்திவிடுகிறார். அவர் பணி ஓய்வு பெறும் நாள் வரை அவரது பிள்ளைக்கு வேலை கிடைக்க வில்லை.  [அல்லது வேலைக்குச் சென்ற பிள்ளை தாய் தந்தையரைத் தவிக்க விட்டுவிட்டு, மனைவியுடன் தனிக் குடித்தனம் சென்று விடுகிறான்;] அந்த அவல நிலையில் அவரது சாப்பாட்டுக்கு, அவர் மனைவியின் சாப்பாட்டுக்கு  வருமானத்திற்கு அவர் எங்கு போவார் ?

குடும்பத்தில் அவர், அவரது மனைவி, படித்தும் வேலை கிடைக்காத அவர் மகன் மூவரும், உணவு உள்படத் தமது அன்றாடத் தேவைக்குப் பணமின்றி என்ன செய்வார்கள் ?  அரசுப் பணியில் இருக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யக் கூடாது, வருமானம் ஈட்டும் எந்தப் பணியிலும் ஈடுபடக் கூடாது என்று சட்டத்தின் மூலம் அரசு அவரைத் தடுத்துவிட்ட நிலையில், அவரது தேவைகளுக்கு அரசு தானே பண உதவி செய்தாக வேண்டும். இத்தகையப் பண உதவி தான் அரசு அவருக்குத் தரும் ஓய்வூதியம் !

ஐம்பத்து எட்டு வயதில் பணிலிருந்து ஓய்வு பெற்ற பின், மாதாமாதம் அவர் பெற்று வந்த சம்பள வருமானம் கதுமென (திடீரென) நின்று போகிறது. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பணிக் கொடைத் தொகையை வைத்து  ஒரு வீட்டை வாங்க முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். கையில் வேறு பணமில்லை. உடல் தளர்ந்த நிலையில் அவர் வேறெங்கும் வேலைக்குச் செல்லவும் முடியாது; சென்று குடும்பத் தேவைக்கான பணத்தை ஈட்டவும் முடியாது !

உடலில் உயிர் இருக்கும் வரை அவர் வாழ்ந்தாக வேண்டுமே ! உயிர்வாழ அவரால் இனிமேல் ஓடியாடிச் சம்பாதிக்க முடியாது.  அவருக்கு உயிர்வாய்த் தண்ணீர் ஊற்றும் கடமை அரசுக்கு இல்லையென யாரும் மறுக்க முடியாதுஏனெனில் அவர் அரசுப் பணியில் இருக்கும் வரை வேறு சம்பாத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று சட்டத்தின் மூலம் தடுத்தது அரசு தானே !

ஆகையால், ஓய்வு பெற்ற அலுவலருக்கு அரசு ஓய்வூதியம் தருவது கட்டாயக் கடமை மட்டுமல்ல 100 % ஞாயமும் கூட ! ஓய்வூதியம் என்பது அவருக்கு அரசு தரும் சலுகை அல்ல; அவரது உரிமைத் தொகை !

----------------------------------------------------------------------------------------------------------

[ சம்பளம் மட்டுமல்ல, அன்றாடம் கையூட்டு வாங்கி பைநிறையக் காசுடன் வீட்டுக்குச் செல்லும் அலுவலர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கும் ஓய்வூதியம் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது ! அதைப்பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.]

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 26.]
{09-02-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (45) தனியார் கல்வி நிறுவனக் கொத்தடிமைகள் !

உழைப்புச் சுரண்டல் ! 


தனியார் பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களிடம் வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் டிசம்பர் 4 – 2018 அன்று சுற்றறிக்கை அனுப்பியது !

இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் மூலம் வாதிடுகையில்அசல் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைத்தால், கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறிவிடக் கூடும். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கும்.” என்று  முறையிட்டார் !

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் அண்ணா பல்கலைக் கழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. - பிப்ரவரி 07 - 2019 , நாளிதழ்ச் செய்தி !

தனியாரினால் நடத்தப்படும்  கலைக் கல்லூரியானாலும் சரி, பொறியியல் கல்லூரியானாலும் சரி, பேராசிரியர்களிடம் அவர்களது கல்விச் சான்றுகளை ஏன் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் ?

அரசினர் கலைக் கல்லூரிகளிலோ, பொறியியற் கல்லூரிகளிலோ, அல்லது வேறு பயிலகங்களிலோ பணியில் சேரும் பேராசிரியர் போன்றோரிடம், அவர்களது கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்வது இல்லை !

அரசு அலுவலகங்களில் பணியில் சேரும் எந்த அலுவலரிடமும், கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்வது இல்லை. பயிற்சி முடித்துப் பணியில் சேரும் காவல் துறை அலுவலர்களிடமோ, துணை ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், கூட்டுறவுத் துணைப் பதிவாளர் போன்ற அலுவலர்களிடமோ  கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்வது இல்லை !

தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் பேராசிரியர்களிடம் கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்வது ஏன் ? இந்தக் கேள்விக்கான விடை மிக எளிது தான் ! கொத்தடிமைகள் வேறு எங்கும் இல்லை; தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமே இருக்கின்றனர் !

ஒரு பேராசிரியருக்குத் தனியார் பொறியியல் கல்லூரியில் தொகுப்பூதியமாக உருபா 10 ஆயிரம் தந்தால், அத்தொகை அவரது குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமா ? தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயம் இல்லாத சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, காலமெல்லாம் அங்கு ஊழியம் புரிய வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன அறம் ? வேறு கல்லூரியில்  உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைத்தால் அங்கு செல்வது இயல்புதானே !

உருபா 10 ஆயிரம் அளவுக்குக் குறைந்த சம்பளம் தந்துவிட்டு அவரது கல்விச் சான்றுகளைத் தங்களிடம் வாங்கி வைத்துக் கொள்வது கொத்தடிமைத் தனம் அன்றி வேறென்ன ? குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பேராசிரியர், கல்வியாண்டின் இடையில் வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டால் தங்கள் கல்லூரி மாணவர்களின் படிப்புக் கெட்டுப் போகுமாம். மாணவர்கள் மீது என்னே அக்கறை !

இந்திராகாந்தி இருந்தபோது கொத்தடிமை மீட்பு புதிய கதிப்பில் நடந்தது. தமிழ்நாடெங்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் ஆசிரியர்களை மீட்பதற்கு இன்னொரு இந்திரா காந்தி எப்போது வரப் போகிறார் ?

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 26.]
{09-02-2019)
----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (44) காலம் தான் எத்துணை மாறிவிட்டது ?

 வண்டியில் பாதுகாப்புக்கு காவலரும் இல்லை;   கட்சித் தோழர்களுமில்லை !



எனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் அரசுத் தொடக்கப் பள்ளியில் 1954 – ஆம் ஆண்டு வாக்கில் ஐந்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த காலம். அப்பொழுது காமராஜர் தமிழக முதல்வர். பக்தவத்சலம் கல்வி அமைச்சர் என்பதாக நினைவு !

புதிதாகக் கட்டிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைக்க பக்தவத்சலம் வந்திருந்தார். அவருடன் ஒரேயொரு காவல் உதவி ஆய்வாளரும் இரண்டு காவலர்களும் மட்டும் அன்று பாதுகாப்புக்கு  வந்திருந்தது இன்றும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது !

பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில், வித்வான் மானைக்கால் என்னுமிடத்தில் மாமாவின்  மளிகைக்கடையில் உதவிக்கு இருந்த காலகட்டம். பேருந்து செல்லும் தார்ச் சாலை ஓரத்தில் மாமாவின் வீடும் கடையும் !

கடையில் நான் அமர்ந்திருக்கிறேன். சாலையில் ஒற்றை மாட்டு வண்டியில் பேராசிரியர் .அன்பழகன் தனியாக அமர்ந்திருக்க, வண்டி நெடும்பலம் நோக்கிச் செல்கிறது. அப்போது அவர் தமிழகமெங்கும் நன்கறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவர்.  கழகத் தோழர் கல்யாணசுந்தரம் வீட்டுக்கு அவரது பயணம். அவருக்கு வண்டியில் பாதுகாப்புக்கு காவலரும் இல்லை; கட்சித் தோழர்களுமில்லை !

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளராக நான் பணியிலிருந்தேன். இந்திரா காந்தி இந்தியத் தலைமை அமைச்சர். 1966-ஆம் ஆண்டில் ஒருமுறை தஞ்சைக்கு, அப்போதைய மைய அரசு அமைச்சரான  சி.ஆர். பட்டாமிராமனுடன், வருகிறார். கும்பகோணத்தில் இருந்து  பாபநாசம் வழியாக மகிழுந்தில் (CAR) பயணம். அவருடன் நான்கு அல்லது ஐந்து மகிழுந்துகள் பின் தொடர்கின்றன !  

பாபநாசத்தில் மகிழுந்திலிருந்து இறங்கி, கூடியிருந்த மக்களிடையே ஐந்து நிமிடம் பேசுகிறார். இந்திராகாந்தியின் பாதுகாப்புக்கு ஒரேயொரு காவல் துறை ஊர்தி. பத்து பேருக்கும் குறைவான காவலர்கள், ஒரு உதவி ஆய்வாளர். காவலர்கள் யாரும் இந்திராகாந்தியைச் சுற்றி அரண் அமைத்து நிற்கவில்லை !

அது அந்தக் காலம் !  இப்போது ?

மாநில அமைச்சர் ஒருவர் தஞ்சை வருகிறார். அவருடன் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் மகிழுந்து அணிவகுப்பு. அமைச்சரின் ஊர்திக்கு முன்பாக காவல் துறை ஊர்தியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சில அலுவலர்கள் அமைச்சரின் முன்புறப் பாதுகாப்புக்கு !

அமைச்சர் அமர்ந்துள்ள  ஊர்தியின் பின்வரிசையில்  நான்கைந்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள். அதை அடுத்து கலவரத் தடுப்புப் படை ஊர்தி உள்பட நான்கைந்து காவல் ஊர்திகள். அவற்றில் ஐம்பதுக்கும் குறையாத காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள். அமைச்சர் மகிழுந்திலிருந்து இறங்கியவுடன், காவலர்கள் அவரைச் சுற்றி அரண் அமைத்து நிற்கிறார்கள் !

கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கும் மக்கள் அவற்றை அமைச்சரின் உதவியாளரிடம் தான் தர முடிகிறது. கட்சித் தலைவர்களைத் தவிர பொது மக்கள் யாரும் அவரை நெருங்க முடியவில்லை !

ஒரேயொரு உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள்  பாதுகாப்புடன் வருகை தந்த அன்றைய அமைச்சர் பக்தவத்சலத்துடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர், புடை சூழ வருகை தரும் இன்றைய அமைச்சரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; காலம் தான் எவ்வளவு மாறிவிட்டது !

பாதுகாப்புக்கு யாருமின்றித் தனியாக ஒற்றை மாட்டு வண்டியில் அன்று பயணம் செய்த பேராசிரியர் அன்பழகனையும் இன்றைய அரசியல் கட்சிகளின் முதல் வரிசைத்  தலைவர்களின் இப்போதைய பயண ஏற்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; காலம் தான் எவ்வளவு மாறிவிட்டது !

காவலர்கள் ஓரமாகத் தள்ளி  நிற்க, , மக்கள் கூட்டத்திடையே பாபநாசத்தில் ஐந்து நிமிடம் உரையாற்றிய அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தியையும், புது டில்லி செங்கோட்டையில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று கொண்டு உரையாற்றும் இன்றைய தலைமை அமைச்சரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது !

அன்று அமைச்சர் பெருமக்களும், இந்தியத் தலைமை அமைச்சரும் மக்களோடு மக்களாக நெருங்கி நின்றனர்; இன்று அமைச்சர் பெருமக்களும், இந்தியத் தலைமை  அமைச்சரும் மக்கள் நெருங்க முடியாத வெகு தொலைவில் ! காலம் தான் எவ்வளவு மாறிவிட்டது !

இந்த நிலை மக்களாட்சிக் கோட்பாட்டின் எழுச்சியா ? வீழ்ச்சியா ?

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 17.]
{31-01-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------