பக்கங்கள்

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

சிந்தனை செய் மனமே (37) ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை !


அரசியல்  ஆதாயம் கருதி, கைம்முதலை  இழக்கலாமோ ?

--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் – (குறள்.463)
-----------------------------------------------------------------------------------------------------------

எதிர்காலத்தில் பெறக் கூடிய ஆதாயங்களைக் கருதி, இப்போது கையிருப்பில் உள்ள முதலினை இழக்கக் கூடிய செயல்களை அறிவுடையார் மேற் கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர் !

ஒரு நல்ல அரசுக்கு அழகு, மக்களுக்கு நீண்ட காலத்திற்கு நிலையான பயன் தரக் கூடிய உயர்பயன் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும் !

புதிய அணைகள் கட்டுதல், உயர் தரத்துடன் கூடிய சாலை வசதிகளை ஏற்படுத்துதல், ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் சீர்கெடாத பள்ளி / கல்லூரிக் கட்டடங்களைக் கட்டி கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாதுகாக்கப்பட்ட, நிலையான குடிநீர்த் திட்டங்களை உருவாக்குதல், வேளாண்மைக்குத் தேவையான நிலையான, தட்டுப்பாடில்லாத  நீர் வழங்கலை உறுதி செய்யும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மேற்கொள்ளல், மழைப் பொழிவுக்கு அடிப்படைத் தேவையான வனவளத்தை 100 % விரிவு படுத்திப் பாதுகாத்தல் மற்றும் இன்னோரன்ன பயன்மிக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் !

ஆனால் தமிழக மக்கள் இத்தகைய நல்வாய்ப்பைப் பெற்றிட வில்லை. 2018-19 –ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பாதீட்டின்படி (பாதீடு = BUDGET) அரசின் வருவாயில் 75,00,00,00,00,000 (75 ஆயிரம் கோடி) உருபா இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இலவசம் என்றாலும் மானியம் என்றாலும் பொருள் ஒன்றே) இந்த 75 ஆயிரம் கோடி உருபாவை வைத்து சில  புதிய  அணைகளைக் கட்டலாம்; பழைய அணைகளைத் தூர் வாரலாம்; பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டலாம். இன்னும் எத்தனையோ பணிகளைச் செய்யலாம் !

மக்களிடம் வாக்குப் பறிப்புச் செய்யும் பாங்கிலேயே 75 ஆயிரம் கோடி உருபா இலவச / மானியத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 75 ஆயிரம் கோடி உருபாவும் விழலுக்கு நீர் பாய்ச்சுகிறதே தவிர, பயிருக்கு நீர் பாய்ச்ச வில்லை. பாவம் தமிழக மக்கள் ! பாவம் தமிழ் நாடு !

------------------------------------------------------------------------------------------------------
இலவச (மானிய)த் திட்டங்கள்தமிழகப் பாதீடு
 ( பட்ஜெட் 2019-20)
------------------------------------------------------------------------------------------------------

மின்சார மானியம்...............................................= 10,492.00 கோடி
வேளாண்மை & இதர மின்
நுகர்வோர் மின் மானியம்............................ = 08,118.25 கோடி
உணவு மானியம்..................................................= 06,643.00 கோடி
உள்ளாட்சி சிறப்பு நிதியுதவித்
திட்ட மானியம்.....................................................= 05,178.52 கோடி
நலிவடைந்தோர் பிரிவு சமூகப்
பாதுகாப்பு உதவி..................................................= 03,958.00 கோடி
தொழிற்துறை முதலீட்டு
மானியம்...................................................................= 02,500.00 கோடி
சத்துணவுத் திட்டம்............................................= 01,772.00 கோடி
இலவசப் பாடப்புத்தகம்,குறிப்பேடு,
காலணி, புத்தகப்பை வழங்கல்....................= 01,658.90 கோடி
இடைநிற்றல் தடுப்பூக்கத் தொகை
வகுப்பு 10,11,12 க்கு..............................................= 01,363.27 கோடி
முதலமைச்சர் விரிவான
காப்பீடு திட்டம் ..................................................= 01,363.00 கோடி
முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு
உதவித் திட்டம்...................................................=   ,959.21 கோடி
மாணவர் இலவச பஸ் பாஸ்
மானியம்..................................................................= 00,766.00 கோடி
திருமண நிதியுதவித்
திட்டம்.......................................................................= 00,726,00 கோடி
பயிர் காப்பீட்டுத் திட்டம்.................................= 00,621.59 கோடி
இலவச வேட்டி & சேலைத்
திட்டம்......................................................................= 00,490.20 கோடி
முதல் தலைமுறை பட்டதாரி
கல்வி மானியம்..................................................= 00,460.25 கோடி
டீசல் மானியம்....................................................= 00,280.00 கோடி
போக்குவரத்துத் துறை
இலவச டீசல் மானியம்..................................= 00,250.00 கோடி
மானிய விலை பாவை
ஊர்தித் திட்டம்.....................................................= 00,250.00 கோடி
கரும்பு உற்பத்தி ஊக்கத்
தொகை.....................................................................= 00,200.00 கோடி
இலவச வெள்ளாடு/செம்மறி
ஆடு திட்ட மானியம்........................................= 00,198.75 கோடி
நெல் கொள்முதல்
ஊக்கத் தொகை....................................................= 00,180.00 கோடி
மீனவர் மீன்பிடித்
தடைக் கால உதவி............................................= 00,170.13 கோடி
முதியோர், மாற்றுத் திறனாளி
விதவை உதவித் திட்டம்................................= 00,168.81 கோடி
பெண் மகவு பாதுகாப்புத்
திட்டம்.......................................................................= 00,140.00 கோடி
மானிய விலை நீர் ஏற்றம்
திட்டம்........................................................................= 00,084.09 கோடி
இலவச கறவைப் பசு
மானியம்....................................................................= 00,049.83 கோடி
கைத்தறி உதவித் திட்டம்................................= 00,040.00 கோடி
-------------------------------------------------------------------------------------------------------
எல்லா மானியங்களும் சேர்த்து
மொத்தம்.................................................................= ரூ 75,000 கோடி.
------------------------------------------------------------------------------------------------------
மாற்றுத் திறனாளிகளுக்கு லவச  நான்கு சக்கர
ஊர்தி & துள்ளுந்து உதவியும் உண்டு.
-----------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம்,04]
{18-03-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (36) வல்லுநர்கள் அமைச்சர்களாக வேண்டும் !

தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள் நிதியைக் கையாளும் பொறுப்பை ஏற்க வேண்டும் !


ஒரு அரசாங்கத்தை ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆளுமை செய்து நடத்திச் செல்வது என்பது விளையாட்டான செயல் அல்ல. அரசின் வருவாயைப் பெருக்கி, பயனற்ற வீண் செலவுகளைத் தவிர்த்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகுதியான அளவு நிதி ஒதுக்கிச் செயல்படுத்தினால் தான் நாட்டுப் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் வெகுவாக உயரும் !

நாட்டின் வளர்ச்சிக்குத் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிடல் வேண்டும். சரியான தொலை நோக்குப் பார்வை எல்லோருக்கும் இருக்க முடியாது. துறை வல்லுநர்கள் தான் அதைச் செய்ய வல்லவர்கள். வல்லுநர்கள் மட்டுமே ஒவ்வொரு  துறைக்கும் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் !

ஆசிரியப் பணியில் குறைந்தது 30 ஆண்டுகளாவது பணியாற்றியவர் மட்டுமே பள்ளிக் கல்வி அமைச்சராக அமர்வு செய்தல் வேண்டும். கல்லூரிகளில் குறைந்தது 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் உயர்கல்வி அமைச்சகப் பொறுப்பை ஏற்க வேண்டும் !

தனது சொந்த நிலத்தில் வேளாண்மை செய்து 30 ஆண்டுகள் பட்டறிவு பெற்ற பட்டதாரி மட்டுமே வேளாண் துறை அமைச்சராக அமர்த்தப்பட வேண்டும். உயர் நீதி மன்றத்தில் அல்லது உச்ச நீதி மன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி, சட்டத் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டும் !

தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளாவது தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பட்டதாரி,  தொழிலாளர் நலத் துறை அமைச்சராக வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் எத்தகைய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு செய்து அத்துறையில் பட்டம் பெற்ற அறிஞர் மட்டுமே தொழில் துறை அமைச்சராகப் பொறுப்புக்கு வர வேண்டும் !
அமெரிக்க நாட்டில், இவ்வாறு வல்லுநர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமனம் செய்யும் வழக்கம் நடைமுறயில் உள்ளதை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.

இத்தகைய நடைமுறை நம் தமிழ் நாட்டிலும் வழக்கிற்கு வந்தால், தமிழ்நாடும், தமிழ் மக்களும், தமிழ் மொழியும் விரைந்து உயர்நிலையை அடைய முடியும் என்பது திண்ணம் !

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழில் ஆய்வுகள் பல செய்து, நூல்கள் பல வெளியிட்டு, தனித் தமிழில் எழுதவும், உரையாடவும், வல்லமையுள்ள, தமிழ் உணர்வு மிக்க ஒருவர் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்க வேண்டும் !

இந்த நிலையை அடைய அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இது இயலக் கூடியதாகத் தெரிய வில்லை. ஏனெனில், நம் நாட்டில் உள்ள தேர்தல் முறைகளும், அதற்கான சட்டங்களும் தவறான மனிதர்களையே பதவில் அமர்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றன ! .

பதவி ஆசை, பண ஆசை, அதிகார ஆசை என்று பல்வகையிலும் பேராசை பிடித்த மனிதர்கள் கூட்டத்தைத் தான்  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குகிறது. இதனால், குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாக மக்களாட்சிக் கோட்பாடு சிதைந்து சீரழிந்து கொண்டு  இருக்கிறது !

இத்தருணத்தில், தமிழ் நாட்டைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம் ! கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆளுமைத் திறன் எப்படி இருந்திருக்கிறது ? தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப் பெற்றனவா  ? தமிழ்நாட்டின் பொருளாதாரச் செழுமை வளர்ச்சி பெற்று இருக்கிறதா ?  இதை அறிவதற்கு தமிழக அரசின் நிதி மேலாண்மை பற்றிய புள்ளி விவரம்  நமக்கு உதவும் !

நிதி  மேலாண்மை என்றால் அரசின் மொத்த வரவைத் திட்டமிடுதல், மொத்தச் செலவைத் திட்டமிடுதல், செலவுகள் வரவுகளுக்கு உட்பட்டு இருக்குமாறு திட்டங்களை வகுத்தல், கடன் சுமை இல்லாமல் திட்டங்களைத் தீட்டுதல் ஆகியவையே !

2018-19 –ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பாதீட்டின்படி (பாதீடு = BUDGET) மொத்த வரவு = 1,91,721.17 கோடி. மொத்தச் செலவு = 2,08,671.26 கோடி. பற்றாக்குறை = 10,950.09 கோடி. தமிழக அரசு (வாங்கியுள்ள) கடன்  = 3,97,495.96 கோடி !

தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு எவ்வாறு பெருகி வந்திருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையில்  பாருங்கள் !
 
---------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு அரசின் கடன் சுமைப் பெருக்கப் பட்டியல்
---------------------------------------------------------------------------------------------------------     
(01) 2006-07                 0,57,457 கோடி
(02) 2010-11                 1,01,541 கோடி
(03) 2012-13                 1,35,060 கோடி
(04) 2013-14                 1,55,129 கோடி
(05) 2014-15                 1,78,170 கோடி
(06) 2015-16                 2,11,483 கோடி
(07) 2016-17                 2,52,431 கோடி
(08) 2017-18                 3,14,366 கோடி
(09) 2018-19                 3,55,845 கோடி
(10) 2019-20                 3,97,495 கோடி
(11) 2020-21                 4,56,660 கோடி.

------------------------------------------------------------------------------------------------------

தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள் நிதியைக் கையாளும் பொறுப்பை ஏற்றிருந்தால் அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு இந்த அளவுக்கு மிகுதிப் பட்டு வந்திருக்காது. பொருளாதார வல்லுநர் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்படாத வரை இத்தகைய சீரழிவு நிலை நீடிக்கவே செய்யும் !

நாட்டு அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் நேர்மையாளர்களாக, நாட்டு வளர்ச்சியில், மாநில வளர்ச்சியில்  அக்கறை கொண்டவர்களாக, தன்னலமற்றவர்களாக இருந்தால் மட்டுமே, நாடும் மாநிலமும் முன்னேற முடியும். ஆனால் நாம் அத்தகைய நல்வாய்ப்பை இன்னும்  பெற வில்லை !

மைய அளவில் ஆட்சிக்கு வரும் அனைவருமே தன்னலம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.  அரசியல் அமைப்புச் சட்டத்தை, நன்மை தரும் வகையில் மாற்றி அமைக்க அவர்கள் சிந்திப்பதே இல்லை. நேர்மை இல்லாதவர்கள் கையில் திறவுகோலைக் கொடுத்து விட்டு அச்சப்பட்டு அடங்கிப் போகும் மக்களாக நாம் நம்மைச் சுருக்கிக் கொண்டு வாழ்வை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் !

இந்த கட்டுரையால் அரசியல் அளவில் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் இதைப் படிக்கும் நண்பர்களுள் ஒரு சிலராவது விழிப்புணர்வு பெற்றால் அதுவே போதும் ! அத்தகைய முயற்சியின் விளைவு தான் இந்தக் கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,03.]
{17-03-2019}
------------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (35) கிழக்கும் வெளுக்க வில்லை ! கீழ்வானமும் சிவக்கவில்லை !

மதிகெட்ட மாந்தர்களே ! மலை வளத்தை அழிக்காதீர் !



இப்பூவுலகானது மலையும் மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என நமது முன்னோர்களால் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றைத்தான் நமது இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அழகாகப் பெயர்சூட்டி அழைக்கின்றன !

இந்நால்வகை நிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி உயிரினங்கள் வாழையடி வாழையாகச் செழித்து வாழப் பேருதவி புரிகின்றன !

ஆழிப் பெருங்கடலின் உவர் நீர் ஆவியாகி மேகக் கூட்டங்களாகத் திரண்டு காற்றினால் அடித்துச் செல்லப் படுகையில், மலையினால் தடுக்கப்பட்டு, மழையாகப் பெய்விக்கப்படுகிறது. மலையில் பெய்யும் மழை, அங்கு நெடிதுயர்ந்த மரங்களையும் செடி கொடிகளையும் வளரச் செய்து பசுமையான சூழலை உருவாக்குகிறது !

மலைமீது விரிந்து கிடக்கும் இந்த பசுமைப் போர்வைதான், அங்கு உண்ணத்தை (வெப்பம்) அண்டவிடாமல் செய்து தண்ணத்தை (குளிர்ச்சி)  எங்கெங்கும் அள்ளித் தெளித்து அழகு சேர்க்கிறது. நீரைச் சுமந்து திரியும்  மேகங்கள், மலை மீது நிலவும் தண்ணத்தினால் சிலிர்ப்புற்று (குளிர்ந்து) மழையாகப் பொழிகிறது !

மலையில் பொழியும் மழை, பள்ளம் நோக்கித் தவழ்ந்துசிலு சிலுவென்று ஓடிச்  சிற்றோடைகளை உருவாக்குகிறது; நுங்கும் நுரையுமாய்ப் பரந்து விரிந்து தரையைத் தடவிக் கொண்டு ஓடுகையில் காடுகளை உருவாக்குகிறது; உயிர்ப்பிக்கிறது. சிற்றோடைகள் பலவும் சேர்ந்து ஆறுகளாக உருவெடுத்து, உணவு தானியங்களை விளைவிக்கும் வண்டல் மண் நிறைந்த வயல் வெளிகளைச் செதுக்கித் தந்து விட்டு, இறுதியில் தனது தாய்வீடான கடலைச் சென்று  அடைகிறது !

மழை இல்லையேல் உயிரினங்களுக்கு உணவு இல்லை. உணவில்லையேல் உயிரினங்கள் மடிந்து ஒழிந்துவிடும். உயிரினங்கள் இல்லையேல் இப்பூவுலகம் வெறும் பாறைக் கோளமாகிவிடும். இந்த உண்மை ஒவ்வொரு மனிதனின் அறிவுத் தவிசிலும் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறது !

அறிவார்ந்த மனிதன் மலைக்கும் மழைக்கும் உள்ள உறவு பற்றி  உணரவே செய்கிறான். ஆனால், செல்வத்தை வாரிக்  குவித்திட ஆலாய்ப் பறக்கும் அழிமதியாளர்கள், மலை வளத்தைச் சீரழித்துச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம், மலையில் உள்ள மரங்கள் பெருவாரியாக வெட்டிக் கடத்தப் படுகின்றன. மறுபக்கம், தேயிலைத் தோட்டங்கள், குளம்பித் (COFFEE PLANTATION) தோட்டங்கள், ஏலக்காய்த் தோட்டங்கள், புல்லைத் தோட்டங்கள் (ROSE GARDEN) உருவாக்குவதற்காக வனப்பகுதி தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது !

இன்னொரு பக்கம், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், காடுகள் அழிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கில், உறை விடுதிகளும் (LODGES), உடு விடுதிகளும் (STAR HOTELS),  உண் விடுதிகளும் (HOTELS), வளமனைகளும் (BUNGALOW) பல்கிப் பெருகி, மலையின் இயற்கைத் தோற்றத்தையே மாற்றிக் கொண்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பெருக்கத்தால், மலைப் பகுதிகள் குப்பை மேடுகள் ஆகி வருகின்றன !

பழங்குடினர் மட்டுமே ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்த மலைப் பகுதிகள் எல்லாம் இன்று பணமுதலைகளின் பகட்டு மாளிகைகளாக மாறிவிட்டன. மக்கள் தொகைப் பெருக்கத்தால், விடுதிகள் எண்ணிக்கையின் விரிவடைவால், மலையில் உள்ள ஏரிகள் எல்லாம் கழிவு நீர்த் தேக்கங்களாக உருவெடுத்து வருகின்றன !

மரங்களை இழக்கும் மலை, மழையைத் தருவிக்கும் வல்லமையை இழந்து விடுகிறது. இந்த உண்மை ஆட்சிக் கட்டிலில் இருப்போரின் செல்லரித்துப் போன சிந்தனையில் பதிவதே இல்லை !

தமிழ் நாட்டின் மலை வளம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. மலையின் இயற்கைச் சூழல் செத்து மடிந்து கொண்டிருக்கிறது. மழை வளம் அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் மக்களை பிடர் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.. மழைப் பொழிவுக் குறைவினால் வேளாண்மை அழிநிலைக்கு வந்து கொண்டிருக்கிறது !

இதைப் பற்றிச் சிந்தித்து பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்துக் கோண்டிருக்கிறார்கள். செயல் மறந்த ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்டுத் திணறடிக்க வேண்டிய மக்கள், பக்கத்து வீட்டுப் பங்காளியுடன் சொற்போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வெற்றி பெற்றதுவிஸ்வாசமா” “பேட்டயா என்று !

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் வேலூரும்ஊட்டியும் ஒன்றுக்கொன்று இணையாகப்  போகிறது கோடைகால வெப்பத்தின் தகிப்பில். ஏற்காடு ஏரியும் தலைநகரத்துக் கூவமும் ஒன்றுக்கொன்று நிகராகப் போகிறது கழிவுநீர்ச் சேர்க்கையில். கொடைக்கானலின் குளிர்ச்சியைத் துய்க்க விரும்பி அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடையப்போகிறது !

பேராசை பிடித்த அரசியல்வதிகளின் அழிசெயல்களால், தமிழகத்தின் வளம் ஏவுகணை வேகத்தில் வற்றிக் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கு, நாம் குறிஞ்சி நிலத்தை விட்டுவைக்கப் போவதில்லை; முல்லை நிலத்தை தந்து செல்லப் போவதில்லை; மருத நிலம் நிலை திரிந்து பாலை நிலமாகக் காட்சி தரப் போகிறது; நெய்தல் நிலப்பகுதியில் சுரபுன்னையும் இருக்காது; தாழையும் இருக்காது. தாதுமணல் கொள்ளையர்கள் மட்டுமே அங்கு நடமாடிக் கொண்டிருப்பார்கள் !


மக்களாட்சி என்ற பெயரில் கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகு சொரிந்து கொண்டிருக்கிறோம். தன்னலம் தலைவிரித்து ஆடுகிறது ! தமிழகத்திற்கு விடியல் கிடைக்குமா ? தெரியவில்லை !  கிழக்கும் வெளுக்கவில்லை; கீழ் வானமும் சிவக்கவில்லை ! கிழித்து எழும் விடி வெள்ளியும் முளைக்கவில்லை !! தமிழ் மக்களின் உறக்கமும் கலையவில்லை !!!

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, மீனம்,02]
{16-03-2019)
----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

கவிதை (04) (1963) புரட்சிக் கவியே ! பொன்மணியே ! (தமிழரசனுக்காக)


     

         கொத்து (1)                                                                                                மலர் (003)
==============================================================
கவியரங்கத்தில் பங்கேற்கத் தயங்கிய தஞ்சை 
மன்னர் சரபோசிக் கல்லூரி நண்பர் 
இரா.தமிழரசனுக்கு விடுத்த கவிதைக் கடிதம்
( ஆண்டு 1963 )
=============================================================

          புரட்சிக்           கவியே !          பொன்மணியே !
                  
                  பொலிவுறு          விளக்கே !        தமிழரசே !
          
          திரட்சிக்          கனியே !          தமிழ்த்தேனே !
                  
                   தென்னவர்          கோவே !         தேன்மதியே !
          
           மருட்சி           கொளாதே !      மயங்காதே !
                  
                    மகிழ்ச்சி            யுடன்நீ           கவிபாடு !
          
            தருணம்          காலம்            பாராதே !
                  
                     தமிழ்த்              தூதாற்று !        தாய்போற்று !

=============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

---------------------------------------------------------------------------------------------------------------------