பக்கங்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (28) கறவைகள் பின் சென்று !

கட்டுச் சோறு  கொண்டு போய்க் காட்டிலே அமர்ந்து   உண்பவர்கள் !


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
.........அறிவொன்று  மில்லாத ஆய்க் குலத்து  உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
.........குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
.........அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே
.........இறைவா நீதாராய் பறையலோ ரெம்பாவாய் !

-----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

! கண்ணா ! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்.  கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போய் காட்டிலே சாப்பிடுபவர்கள். அறிவில்லாத அப்பாவிகள். நாங்கள் ஆயர் குலத்தவர்கள். நீ எங்கள் குலத்தில் பிறப்பு எடுத்ததற்கு  நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம். நீ குறை இல்லாதவன்; நற்குணங்கள் படைத்த கோவிந்தன்; இனி நம்முடைய உறவை யாரும் விலக்க முடியாது ! நாங்கள் அறியாதவர்கள் ! அன்பினாலே உன்னைப் பேர் சொல்லி அழைத்திருந்தாலும், ஒருமையில் பேசி   இருந்தாலும்   கோபப்படாதே  !  இறைவா  !   எங்களுக்கு  அருள் புரிவாய் !!

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் = கறவை மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுக்கு  அழைத்துச் சென்று, அங்கேயே பகலெல்லாம் தங்கி கட்டுச் சோற்றினை உண்போம். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து = ஆயர் குலத்தவர்களான நாங்கள் அறிவில்லாத அப்பாவிகள் ; உன்றன்னை = உன்னை; பிறவிப் பெறுந்தனை = எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தமைக்கு ; புண்ணியம் யாமுடையோம் = நாங்கள் மிகுந்த புண்ணியம் செய்திருக்கிறோம்;  குறைவொன்றுமில்லாத கோவிந்தா = நீ குறை இல்லாதவன்; உன்றன்னோடு உறவேல் = எங்கள் குலத்தில் வந்து பிறந்துவிட்டமையால் நீ எங்களுக்கு உறவினன் ஆவாய்; நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது = நம்முடைய உறவை யாராலும் பிரிக்க முடியாது ; அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள் ; அன்பினால் உன்றன்னை = உன் பேரில் உள்ள அன்பின் மிகுதியால் ; சிறு பேர் அழைத்தனவும் = உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருந்தாலும் ; சீறி அருளாதே = எங்கள் மீது கோபம் கொள்ளாதே; இறைவா நீ தாராய் பறையே = கண்ணா நீ எங்களுக்கு அருள் புரிய வேண்டும்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் பாடி வணங்குவோம் பாவையரே வாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:-
     வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2049, சிலை, 27]
(11-01-2019)

------------------------------------------------------------------------------------------------------
      
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------




திருப்பாவை - (27) கூடாரை வெல்லும் சீர் !

எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; பெற்றுக் கொள்கிறோம் ! 


கூடாரை வெல்லும்சீர்  கோவிந்தா உன்றன்னை,
.........பாடிப்  பறைகொண்டு யாம்பெறும்  சம்மானம்,
நாடு  புகழும்  பரிசினால்  நன்றாகச்
.........சூடகமே  தோள்வளையே  தோடே செவிப்பூவே
பாடகமே  என்றனைய  பல்கலனும்  யாமணிவோம்
.........ஆடை உடுப்போம்  அதன்பின்னே பாற்சோறு
மூட  நெய் பெய்து முழங்கை  வழிவாரக்
.........கூடி இருந்து  குளிர்ந்துஏல்ஓர்  எம்பாவாய் !

----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

பகைவர்களை வெல்லுகின்ற கோவிந்தா ! உன்னைப் பாடிப் பாடி நாங்கள் மகிழ்கின்றோமே, இது எங்களுக்குப் போதும். ஆனாலும், உன் கையால்  ஏதாவது சன்மானம் தர விரும்புகிறாயா ?  மெத்தச் சரி ! அள்ளிக் கொடு ! எங்கள் நோன்புக்குப் பரிசு கொடு; வாங்கிக் கொள்கிறோம் ! கைக்குச் சூடகம் கொடு; தோளுக்கு வளையல் கொடு; காதுக்குத் தோடு கொடு; மேல் செவிக்குக் கொப்புக் கொடு; எல்லாவற்றையும் அணிந்து கொள்கிறோம் ! புதிய பட்டாடை அணிகிறோம். அதன் பிறகு நிறைய நெய் ஊற்றிச் சர்க்கரைப் பொங்கல் செய்து உனக்குப் படைக்கிறோம் ! அந்த நெய் முழங்கை வழியாக வடியும்படி, கூடியிருந்து சாப்பிடுகிறோம் ! கொடு ! கொடு !

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

கூடாரை = பகைவரை; உன்றன்னை = உன்னை; பாடிப் பறை கொண்டு = இனிய சொற்களைக் கொண்டு போற்றிப் பாடி; சம்மானம் = வெகுமதி; நாடு புகழும்  பரிசினால்  நன்று  ஆக = ஊரே புகழ்ந்து பேசி மெச்சுமளவுக்கு; சூடகமே = கைகளுக்கு சூடகம் (BRACELET) ; தோள் வளையே = மேற் கைகளுக்கு நெளிவளையல் ; தோடே = காதுகளுக்குத் தோடு; செவிப் பூவே = செவி மடலுக்கு பொற்பூ; பாடகமே = கால்களுக்குப் பாடகம் ; என்று = என ; அனைய = அனைத்து; பல்கலனும் = அணிகலன்களும்; யாம் அணிவோம் = நாங்கள் அணிந்து கொள்வோம்; மூட நெய் = உடலுக்குக் குளிர்ச்சி தரும் நெய் ; வழிவார = வழிந்து வர; கூடியிருந்து குளிர்ந்து = ஒன்றாகக் கூடி இருந்து

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 26]
. (10-01-2019)
------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !    

------------------------------------------------------------------------------------------------------




திருப்பாவை - (26) மாலே ! மணிவண்ணா !

திருமாலே ! மணிவண்ணா ! என்ன வேண்டும்என்று கேட்கிறாயா ?


மாலே  மணிவண்ணா  மார்கழிநீர்  ஆடுவான்
.........மேலையார்  செய்வனகள்  வேண்டுவன  கேட்டியேல்
ஞாலத்தை  எல்லாம்  நடுங்க  முரல்வன
.........பாலன்ன  வண்ணத்து  உன்பாஞ்ச சன்னியமே
போல்வன  சங்கங்கள்  போய்ப்பாடு  உடையனவே
.........சாலப்  பெரும்பறையே  பல்லாண்டு  இசைப்பாரே
கோல  விளக்கே  கொடியே  விதானமே
.........ஆலின்  இலையாய்  அருளேலோர்  எம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

திருமாலே ! மணிவண்ணா ! மார்கழி நீராடுவதற்கு என்ன வேண்டும், என்று கேட்கிறாயா ? வேறொன்றும் வேண்டாம்; பூமியே அதிரும்படி ஒலிக்கிறதே, உன் சங்குபாஞ்ச சன்னியம்அதுபோல சில சங்குகள் வேண்டும். மிகப் பெரிய இசைக்கருவிகள் வேண்டும். அவற்றை முழக்கி, அகங்காரத்தை விலக்கி நாங்கள் பல்லாண்டு பாட வேண்டும் ! கோல விளக்கே ! கொடியே ! விதானமே ! ஆலிலைக் கண்ணா ! அருள் புரிய மாட்டாயா ?

----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

மார்கழி நீராடுவான் = மார்கழி நீராடுவதற்கு; மேலையார் = இனிமேல்; செய்வனகள் வேண்டுவன = என்ன செய்ய வேண்டும் என ; கேட்டியேல் = கேட்பாயானால்; ஞாலத்தை = இந்த உலகத்தை நடுங்க முரல்வன = நடுக்கம் கொள்ளச் செய்யும் வகையில் உரத்து முழங்கும்; பால் அன்ன = பால் போன்ற வெள்ளையான ; உன் பாஞ்சசன்னியமே = உன் கைகளில் தவழும் சங்கு ; போல்வன சங்கங்கள் = அதைப் போன்ற சில சங்குகள் ; போய்ப் பாடு உடையனவே = கொண்டு முழங்க வேண்டும்; சாலப் பெரும் பறையே = பெரிய பறை போன்ற இசைக் கருவிகளை இயக்கி; பல்லாண்டு இசைப்பாரே = உன்னை வாழ்த்தி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவெனப் பாட வேண்டும்; கோல விளக்கே = அழகிய திருவிளக்கு போன்றவனே ! கொடியே = அலங்காரக் கொடிபோன்ற நெடுமாலே ! விதானமே = சுடர்விடும் பன்மணித் திரளே ! ஆலின் இலையாய் = ஆலிலை மேல் பாற்கடலில் துயின்ற மணிவண்ணா ! அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே கண்ணனைப் பாடி வணங்குவோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
  வை. வேதரெத்தினம்,
ஆட்சியர்.
திருப்பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 25]
(09-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
    
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------