பக்கங்கள்

வியாழன், ஜனவரி 10, 2019

புதிய தமிழ்ச் சொல் (41) உடு விடுதி ( STAR HOTEL )


புதுச் சொல் புனைவோம் !



உடு விடுதி = STAR HOTEL

----------------------------------------------------------------------------------------------------

குழந்தையின் பிறப்பியத்தை (ஜாதகத்தை) கணிக்கும் ஆளிநர், பிற செய்திகளுடன் குழந்தையின் நட்சத்திரம் இன்னதென்றும் தெரிவிக்கிறார். திருமணப் பேச்சு நேர்வுகளில் மணமகன், மணமகளின் பிறந்த நட்சத்திரம் என்ன என்பது பற்றிய உசாவல் (விசாரணை) எழுகிறது !


நகர்ப் புறங்களில் தங்கும் விடுதிகள் (HOTELS & LODGES) அமைக்கப் படுகின்றன. இவற்றுக்கு அங்குள்ள வசதிகளைப் பொறுத்து தரம் பிரித்து நட்சத்திர நிலை (STAR STATUS) வழங்கப்படுகிறது !


குளிர்ப் பேழை (REFRIGERATOR) போன்ற மின்மவியல் பொருள்களுக்கு (ELECTRONIC GOODS) அவற்றின் மின் துய்ப்பு (CURRENT CONSUMPTION) அளவைப் பொறுத்து நட்சத்திரக் குறியீடு (STAR RATINGS) வழங்கப்படுகிறது !


இப்படித் தமிழ் வரி வடிவில் சொல்லப்படும் நட்சத்திரம்என்ற சொல் தமிழ்ச் சொல் அன்று. வடமொழியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சொல். சரி ! இதற்குத் தமிழ்ச் சொல்தான் என்ன ?


"மீன் திகழ் விசும்பில் பாயிருள் அகல.....என்கிறது புறநானூற்றில் 25-ஆவது செய்யுள் !


மீன் என்ற சொல் இங்கு நட்சத்திரத்தைக் குறிக்கிறது !


விசும்பின் மீன் பூத்தன்ன உருவ ஞாயில்........” (புறநானூறு - 21).


பல்மீன் நாப்பண் திங்கள் போலவும்.....” (புறநானூறு -13)


படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே....” (புறநானூறு-24)


மீன் பூத்தன்ன தோன்றலர்....என்கிறது திருமுருகாற்றுப் படை (வரி 170).


பல்மீன் நடுவண் பால்மதி போல்.....என்கிறது சிறுபாணாற்றுப்படை. (வரி-219) “


மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி....என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை (வரி-477).


பல் மீன் நடுவண் திங்கள் போலவும்.....இது மதுரைக் காஞ்சி (வரி 769) காட்டும் காட்சி !


இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆளப் பெற்றுள்ள மீன்என்ற சொல் இக்காலத்தில் நட்சத்திரம்என்றும், ஆங்கிலத்தில் ஸ்டார்” (STAR), என்றும் நம் நாவில் தவழ்கிறது !


மீன் என்ற சொல்லுக்கு நீரில் வாழும் ஓர் உயிரினம் (மீன் = FISH) என்றும் ஒரு பொருள் உண்டு.


இஃதன்றி, பொருத்தமான முன்னொட்டுடன் நாண்மீன் (நாள் + மீன் = நாண்மீன் = STAR ), விண்மீன் (விண் + மீன் = விண்மீன் = STAR), வான்மீன் (வான் + மீன் = வான்மீன் = STAR) கோண்மீன் (கோள் + மீன் = கோண்மீன் = PLANET) ஆகிய சொற்களும் தமிழ் ஆர்வலரிடையே வழங்கி வருகின்றன !


சங்கே முழங்கு என்ற பாடலில் விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும்.....என்பார் பாரதிதாசன். இங்கு உடுஎன்ற சொல் நட்சத்திரத்தைக் குறிக்கிறது.


இஃதன்றி ஆனியம்என்ற சொல்லும் நட்சத்திரத்தைக் குறிப்பதாக இலக்கியங்களில் வழங்கப்படுகிறது.


சரி ! மீன், நாண்மீன், விண்மீன், வான்மீன், உடு, ஆனியம் என்று பல சொற்களைத் தமிழில் வைத்துக் கொண்டு ஸ்டார் ஹோட்டல்என்பதை நட்சத்திர விடுதிஎன்று சொல்வானேன் ? பழைய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தி புதிய சொற்களைப் படைப்போமே !


==========================================================


STAR HOTEL................................= உடு விடுதி

TWO STAR HOTEL.......................= ஈர்ம்மீன் விடுதி


THREE STAR HOTEL...................= மும்மீன் விடுதி


FOUR STAR HOTEL.....................= நான்மீன் விடுதி


FIVE STAR HOTEL.......................= ஐம்மீன் விடுதி


FIVE STAR AIR-CONDITIONER...= ஐம்மீன் பதனி


FIVE STAR REFRIGERATOR.......= ஐம்மீன் குளிர்ப் பேழை


===========================================================


ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்முகநூல்.

{10-01-2019}

===========================================================

 

உடுவிடுதி